ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ராகேந்திரன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். இதில் ஏ1 குற்றவாளியாக ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘நாகு’ மற்றும் ‘ பெரியவர்’ என ரவுடிகள் மத்தியில் பிரலமாக அழைக்கப்படும் நாகேந்திரன் மீது 5 கொலை வழக்குகள் , 14 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 26 வழக்குகள் உள்ளன. நாகேந்திரன் சிறையில் இருந்தவாறே பல கொலைகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். கொலைகளுக்கு திட்டம் திட்டி கொடுத்தாலும் பெரும்பாலான வழக்குகளில் இவர் பெயரை கொலையாளிகள் சொல்ல மாட்டார்கள் என்றும், ரவுடிகள் மத்தியில் நாகேந்திரனுக்கு தனி மதிப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆயுள் தண்டணை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் நேற்று உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரது இறுதி சடங்குகள் வியாசர்பாடி பகுதியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமனும், சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார். நாகேந்திரன் மரணத்தால் வியாசர்பாடி பகுதியே பரபரப்புடனும், பதற்றமாகவும் இருப்பதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாகேந்திரனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், பிரேத பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அதனை மேற்கொள்வார்கள் என நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் நாகேந்திரன் மனைவி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.