சிறையில் சவுக்கு சங்கரை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள அவரது வழக்கறிஞர், இதன் காரணமாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் 2ம் முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 15ம் தேதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த போது தனது அறையில் 2.5கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 3ம் முறையாக வரும் 19ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் 2ம் முறையாக கடந்த வாரம் மனு செய்த நிலையில், கடந்த 10ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் சவுக்கு சங்கரை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள அவரது வழக்கறிஞர், இதன் காரணமாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், சவுக்கு சங்கர் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை புழல் சிறையில் காவலர்கள் சவுக்கு சங்கரை கொடுமைப்படுத்துவதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சவுக்கு சங்கரை சிறை துறையினர் கொடுமை செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.