சென்னை சௌகார்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 288 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய குடியிருப்பு கட்டுமான பணியை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்.


2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி குறித்த நேரத்தில் முடிக்கப்படாததால் ஒப்பந்ததாரரிடம் ஏன்? கால தாமதம் என கேட்டு சரியான நேரத்தில் முடிக்காததால் ஒப்பந்ததாரரை கருப்பு புள்ளி பட்டியலில் வைத்து விடுவேன் என கடிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சௌகார்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா போன்ற காரணங்களாலும், ஒப்பந்ததாரர்கள் கவன குறைவு, சுணக்கம் காரணமாக பணிகள் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் இருந்த நிலையில் இப்போது மின்சாரம், சென்னை மாநகராட்சி, கழிவுநீர் அகற்று வாரியம் என துறைகள் ஒன்றிணைந்து பணியை வேகப்படுத்தியுள்ளோம். ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகள் முழுமையாக முடிக்கப்படும். 2 மாதத்தில் இந்த பகுதியில் குடியிருந்தவர்கள் மீண்டும் மறு குடியமர்த்தப்படுவர். கட்டுமான பணிகளில் எந்தவிதமான சமரசமும் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. தரமான வகையில் தான் இந்த கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரத்திற்கு சந்தேகம் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்கு கேட்டு சென்றபோது எந்த இடத்திலும் திமுக அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் திமுக தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும்.
அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஒரு சில இடங்களில் பட்டியல் இன பொதுமக்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை அறிந்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அதனை சரி செய்து வருகிறோம்” என்றார்.
