Homeசெய்திகள்தமிழ்நாடுநிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது - செல்வப்பெருந்தகை!

நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை!

-

நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார். அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று அதானி குழுமம் 3,000 கோடி ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும். குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014 ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த கலோரி அளவை கொண்டிருப்பதால் நிலக்கரியின் தரம் குறைந்திருக்கிறது. இத்தகைய நிலக்கரி விற்கப்பட்டதன் மூலம் அதானி குழுமம் கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

எனவே, தரம் குறைந்த நிலக்கரியை விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டிய அதானி குழுமத்தின் மிகப்பெரிய மெகா ஊழல் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ