ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வகையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கோட்டைபட்டிணத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், 1 விசைப்படகு, ஜூன் 23 ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகள், ஜூன் 26 ஆம் தேதி நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் 1 விசைப்படகு, ஜூலை 1 ஆம் தேதி பாம்பன் மற்றும் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் மற்றும் 4 நாட்டு படகுகள், ஜூலை 4 ஆம் தேதி கோட்டைபட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த 3 விசைப்படகுகள் மற்றும் 13 மீனவர்கள் என மொத்தம் இதுவரை 74 மீனவர்களை கைது செய்ததோடு 4 நாட்டு படகுகளையும், 8 விசைப்படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது.
மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்து ஏற்கனவே இலங்கை சிறையில் ஓராண்டு, இரண்டு ஆண்டு மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்று சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி பலமுறை மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 170-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளையும் விடுவிக்கக் கோரியும் சேதமடைந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவது போல், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும் பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்யக் கோரியும் ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 19.7.2024 வெள்ளிக்கிழமையன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் பாரம்பரிய இந்திய மீனவர் நல சங்கத்தின் சார்பாக நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. விஜய் வசந்த், திரு. ராபர்ட் புருஸ், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. கரு. மாணிக்கம், திருமதி. தாரகை கத்பர்ட், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. ஜோர்தான், இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ர்கள் ஆகியே ஆகியோர் ஆதரவினை தெரிவிக்கிற வகையில் பங்கேற்க உள்ளனர்.
ஆதரவினை 10 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியிலும், தற்போது நடைபெற்று வருகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்வதும், வழக்கு பதிவு செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் எவ்வித இடையூறுமின்றி மீன்பிடிக்கின்ற உரிமையை மீட்டுத் தர வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இத்தகைய தமிழக மீனவர் விரோத போக்கை கண்டிக்கிற வகையில் பெருந்திரளான மீனவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.