Homeசெய்திகள்மாவட்டம்நெல்லை அருகே பரபரப்பு: இலவச வீடு தர மறுத்ததால் ஆத்திரம் - திமுக பஞ்சாயத்து தலைவர்...

நெல்லை அருகே பரபரப்பு: இலவச வீடு தர மறுத்ததால் ஆத்திரம் – திமுக பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை!

-

- Advertisement -

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நெல்லை அருகே பரபரப்பு: இலவச வீடு தர மறுத்ததால் ஆத்திரம் - திமுக பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை!

சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
வள்ளியூர் அருகேயுள்ள கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். திமுகவைச் சேர்ந்த இவர், கண்ணநல்லூர் ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவராகப் பணியாற்றி வந்தார். பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாமரைகுளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் விநியோகம் சரியாக செய்யப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

we-r-hiring

இதையடுத்து, நேற்றைய தினம் இரவு சுமார் 8 மணியளவில் தாமரைகுளம் கிராமத்திற்குச் சென்ற மகாராஜன், குடிநீர் விநியோகத்தைச் சீரமைப்பது தொடர்பாக பஞ்சாயத்து ஊழியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவர் அங்கு வந்து குடிநீர் பிரச்னை குறித்து மகாராஜனிடம் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் மோதலாக மாறியது.

செங்கல்லால் தாக்கிப் படுகொலை
வாக்குவாதம் தீவிரமடைந்ததில் கடும் ஆத்திரமடைந்த இசக்கியப்பன், அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் ஒன்றை எடுத்து பஞ்சாயத்து தலைவர் மகாராஜனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த மகாராஜனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்குச் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை & 2 பேர் கைது
தகவலறிந்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோடிய முதன்மை குற்றவாளியான இசக்கியப்பன் மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கொலைக்கான திடுக்கிடும் பின்னணி
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடிநீர் பிரச்னை காரணமாக இக்கொலை நடந்ததாகத் தெரியவந்தாலும், அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான உண்மையான பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைதான இசக்கியப்பனுக்கு அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய அனுமதி கிடைத்திருந்தது. இதற்காகப் பஞ்சாயத்து தலைவர் மகாராஜனிடம் ஒப்புதல் பெற இசக்கியப்பன் பலமுறை முயன்றும், மகாராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கியப்பன், இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி பஞ்சாயத்து தலைவர் ஒப்புதல் வழங்க உத்தரவு பெற்றார்.

நீதிமன்ற உத்தரவாலும் தீராத பகை
நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று வந்ததால் ஆத்திரமடைந்த மகாராஜன், இசக்கியப்பனைப் பழிவாங்கும் நோக்கில் அவர் வசிக்கும் தாமரைக்குளம் பகுதிக்குக் கடந்த 4, 5 நாட்களாகக் குடிநீர் விநியோகத்தைச் சரிவர செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே வீடு கட்ட அனுமதி தராத ஆத்திரம், அதைத் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தி பழிவாங்கியது ஆகிய காரணங்களால் ஆத்திரத்தின் உச்சத்திலிருந்த இசக்கியப்பன், நேற்றைய தினம் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் செங்கல்லால் அடித்து பஞ்சாயத்து தலைவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. திமுக பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க வள்ளியூர் மற்றும் தாமரைகுளம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்: கோவையில் 800-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!

MUST READ