தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசையும், த.வெ.க. கட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாகக் கூறி த.வெ.க. நிர்வாகிகள் இருவர் காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டின்படி, சம்பவம் தொடர்பாக த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் சமரசம் பேச முயன்றதாகவும், அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த விவகாரம் குறித்து மற்றொரு அமைச்சருக்கும் தகவல் தெரிந்திருந்ததாகவும், “எல்லாம் மேலிடத்துக்கு தெரியும்” என்று குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பதாக உதயநிதி கூறியுள்ளார். இதையடுத்து, “ஆளும் கட்சியில் அந்த மேலிடம் யார்?” என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பேசும்போது நெஞ்சம் கலங்குகிறது, பதறுகிறது என்று முதலமைச்சர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி, தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘சிங்கப்பெண்’ பிரிவு வெறும் விளம்பரத்திற்காகவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுமையான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் எம்.எல்.ஏ. சரவணனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆளும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் யார் என்பதை விசாரித்து, அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்சினிமாவின் சகாப்தம் முடிந்தது – பாரதிராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி..
