மதுரை, உசிலம்பட்டியில் பட்டியலின மக்கள் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறவடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
அதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மோனிகா, உதவி ஆட்சியர் ( பயிற்சி ) வைஷ்ணவி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 231 பயனாளிகளுக்கு 2.16 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார்.
அங்கே குறவடி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய், சாலைகள் இல்லை எனவும், ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பெரும் அவதியுற்று வருவதாகவும் புகார் கொடுத்தனர்.
அந்தமக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உடனடியாக சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்து உடனடியாக ஆக்ரமிப்பு களை அகற்றும் படி உத்தரவிட்டார். மேலும் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.