சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க.நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி இடையே குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா மற்றும் எம்எல்ஏ பல்லவி பங்கேற்றனர். அப்போது குத்துவிளக்கு ஏற்றிய மேயர், மெழுகுவர்த்தியை எம்எல்ஏவிடம் வழங்காமல் அருகில் இருந்த அதிகாரியிடம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தன்னை திட்டமிட்டு புறக்கணித்ததாக பல்லவி தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மேயர் பிரியா, யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும், நிகழ்ச்சியில் அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், நிகழ்ச்சி தொடங்கிய நேரம் மற்றும் எம்எல்ஏ வந்த நேரம் குறித்தும் அவர் தனது தரப்பை முன்வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ பல்லவி அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் வழங்கினார். சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கை தேவையில்லை என்றும், நகராட்சி மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அரசு சார்பில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சபாநாயகரின் இந்த விளக்கத்தால் விவகாரம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தாலும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
”அரசுப் பள்ளிகளில் தவெகவினரின் அத்துமீறல்”…முதல்வரின் நடவடிக்கை எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி
