- Advertisement -
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அருகே 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்வதாக முதலமைச்சர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிட மாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் – உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பதிவில் கூறியுள்ளார். வரலாற்றைப் படிப்பவர்கள் தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து ‘முன் செல்லடா…’ என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


