ஒன்றிய அரசு சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது போன்ற ஒரு போலித் தோற்றம் சில ஊடகச் செய்திகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் உண்மையில் மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை என்றும் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதால், மாணவர்களையும் பொதுமக்களையும் குழப்பும் நோக்கில் ஒன்றிய அரசு இந்தத் தந்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான விளக்கம் பின்வருமாறு,

மாணவர்களைக் குழப்பும் தற்காலிகத் தளர்வுகள்
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நடப்பு கல்வியாண்டுகளில் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு: 2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள். அவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை.
ஆனால், தற்போது ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் 3 மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் எனச் சிபிஎஸ்இ கூறியுள்ளது.
உதாரணமாக, ஒரு மாணவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு அயல் மொழிகளைப் (Non-native languages) பயில்கிறார் என்றால், அவர் 2026-27 கல்வியாண்டில் அந்த இரு மொழிகளுடன், மூன்றாவது மொழியாக ஒரு ‘பாரதிய பாஷா’வை (இந்திய மொழியை) கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாணவர்களுக்கான ஒருமுறைக்குரிய (One-time relaxation) தளர்வாக, அவர்கள் 2027-28 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குச் செல்லும்போது, இந்த மூன்றாவது மொழிக்குப் பொதுத்தேர்வு எழுத வேண்டியதில்லை; பள்ளியளவிலான அக மதிப்பீடு (Internal Assessment) மட்டுமே செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே. மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, முன்பு அறிவித்தவாறே ஆங்கிலம் தவிர்த்து இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாகக் கற்பிக்கப்படும். அதாவது, இதன் மூலம் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ மறைமுகமாகக் கட்டாயமாக்கப் படுகிறது.
மொழிப் பாடங்களையே ஒழித்துக் கட்டும் ஆபத்தான முறைகள்!
மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நேரிடும் என்பதால் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்த கவலையையும் சிபிஎஸ்இ போக்கியுள்ளது. அதற்காகச் சிபிஎஸ்இ அறிவித்துள்ள நெகிழ்வான பணியாளர் நியமன ஏற்பாடுகள் (Flexible staffing arrangements) அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. பள்ளிகள் தங்களின் தேவைக்கு ஏற்பத் தற்போதைய ஆசிரியர்களையோ, ஓய்வுபெற்ற ஆசிரியர்களையோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளையோ தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேசிய கல்விக் கொள்கையில் (NEP) சொல்லப்பட்டுள்ள ‘சஹோதயா கிளஸ்டர்கள்’ (Sahodaya clusters) முறைப்படி, அருகாமையிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது இணையவழியாகவோ (Online), நேரடியாகவும் இணையவழியிலும் கற்பிக்கும் கலப்பு முறையையோ (Hybrid method) பயன்படுத்தலாம். இந்தத் தற்காலிக மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறையானது, பள்ளிகளில் மொழிப் பாடங்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும் ஆபத்து நிறைந்தது என ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசின் எதிர்ப்பை முடக்கச் சதி!
”மும்மொழித் திட்டம் என்ற பெயரில் புகுத்தப்படும் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீர்க்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சூழலில், அந்த எதிர்ப்பின் வீரியத்தைக் கூர் மழுங்கச் செய்வதற்காக ஒன்றிய அரசு செய்யும் அரசியல் தந்திரமே இந்த புதிய அறிவிப்பு என்று ரவிக்குமார் எம்பி தனது அறிக்கையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
ஆசிரியர்களின் மோதலால் கல்வி பாதிப்பு: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்!
