மருத்துவத் தகுதியோ, அரசு அனுமதியோ இன்றி முகாமிற்குள் புகுந்து குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கி, அதனைப் பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்ட த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் கட்சியில் இருந்து 3 மாத காலத்திற்கு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


அத்துமீறிய த.வெ.க நிர்வாகி – முகாமில் அரங்கேறிய கூத்து
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,137 மையங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, முதலமைச்சர், அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அந்தந்த பகுதிகளில் முகாம்களைத் தொடங்கி வைப்பர்; அதன் பிறகு மருத்துவப் பணியாளர்களே அதனைத் தொடர்வர். ஆனால், விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளரான முத்துவேல், எவ்வித அனுமதியுமின்றி ஒரு முகாமிற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் கட்டாயப்படுத்தி கோப்புகளை (Files) வாங்கிப் பார்வையிட்டதுடன், அவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அநாவசியமாக முகம் சுளிக்க வைத்துள்ளார்.
சினிமா பாணியில் ‘ரீல்ஸ்’ மோகம்
அங்குச் சொட்டு மருந்து போடக் குழந்தைகள் யாரும் வராததால், எப்படியாவது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விட வேண்டும் என்ற விளம்பர நோக்கத்தில் முத்துவேல் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு குழந்தைக்கு, அங்கிருந்த மருத்துவக் குழுவினரின் ஆலோசனையைக் கூடக் கேட்காமல், தன்னிச்சையாகப் போலியோ சொட்டு மருந்தை எடுத்து அவரே ஊற்றியுள்ளார். முகாமிற்குள் நுழைந்தது முதல் குழந்தைக்குச் சொட்டு மருந்து ஊற்றியது வரை அனைத்தையும் ஒரு சினிமா பாணியில் பின்னணி இசையுடன் (BGM) ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவு செய்து, தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
தொடரும் அடுக்கடுக்கான புகார்கள்
”அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்” என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழக வெற்றிக் கழகத்தினர் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே சட்ட விதிகளையும், நெறிமுறைகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே த.வெ.க-வினர் மருத்துவரைப் போல வெள்ளை அங்கி அணிந்து கொண்டு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தது, அரசு அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு துணை சபாநாயகர் நாற்காலிகளில் ரீல்ஸ் போட்டது, பள்ளி மாணவர்களிடம் விஜய் படத்தைக் கொடுத்து ‘முதலமைச்சர் விஜய் மாமா வாழ்க’ என முழக்கமிடச் சொன்னது போன்ற செயல்கள் கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தன.
பொதுமக்கள் அதிர்ச்சி – கட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை
எவ்வித மருத்துவத் தகுதியும் இல்லாத ஓர் அரசியல் கட்சி நிர்வாகி, விளம்பர நோக்கத்திற்காகக் குழந்தையின் உடல்நலத்தோடு விளையாடும் வகையில் தன்னிச்சையாகச் சொட்டு மருந்து வழங்கி வீடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக, விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேலை 3 மாத காலத்திற்குக் கட்சியிலிருந்து நீக்கி, கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம் அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.
“ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டும்!” –அன்புமணி கோரிக்கை!
