நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் நீட் விலக்கு குறித்து தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடியது. வருகிற 29ம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் 16 அமர்வுகளில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர் , நீட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். நீட் வந்த பிறகு மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாக ஆகிவிட்டது. மருத்துவத் துறையிலும் பல்வேறு சுகாதாரக் குறியீட்டிலும் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வது தமிழ்நாடு. அனைத்து போட்டித் தேர்வுகளையும் ரத்து செய்து வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
.மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன் வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது என இவ்வாறு பேசினார்.