
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 சரிந்துள்ளது.
உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அதிரடியான ஏற்ற இறக்கங்களுடன் அவ்வப்போது விலை குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எட்டாக்கனியாகி இருப்பதை காணமுடிகிறது. சர்வதேச சந்தைகளில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், உலக நாடுகளில் நிலவும் போர் உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணமாக தங்கத்தின் மவுசு கூடியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ. 60,000ஐ நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது சற்று இறக்கம் காட்டி வருகிறது. அந்தவகையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.165 சரிந்து ஒரு கிராம் 7,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலைக்குறை இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.