திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. புகழேந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) காலை 10.30 மணிக்கு காலமானார்.
திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் – விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்.