எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்- உதயநிதி ஸ்டாலின்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் போக்குவரத்து கழகம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கட்டணமில்லா பயண திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டில் 288 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டம் அமலாகும் முன்பு அரசு பேருந்தில் பயணித்த பெண்களின் எண்ணிக்கை 40% ஆக இருந்தது, தற்போது 70% வரை உயர்ந்துள்ளது. நிதிச்சுமை அதிகமாக இருந்தாலும், தமிழ்நாடு அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்த நிலையில் இருந்தது. போக்குவரத்துத் துறையை சீரமைக்க பல்வேறு திட்டங்கள் திட்டமிட்டுள்ளன. சுகாதாரம், கல்வியை போல போக்குவரத்துத்துறையும் மக்களின் நேரடி தொடர்பில் உள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்” எனக் கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்து கழகங்களை நாட்டுடமையாக்கியவர் கருணாநிதி . தமிழகத்தில் 21 ஆயிரம் பேருத்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட கருணாநிதி வழியில் வந்த ஆட்சியில் போக்குவரத்து கழகம் ஒருபோதும் தனியார் மயம் ஆகாது. தற்போது புதிய பணியாளர்கள் , புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். பின்பு எப்படி போக்குவரத்து துறை தனியார் மயம் ஆகும்..? ஆனால் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் அவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும், அது அந்த நபருக்கு பாதகமாக அமையும் என்ற எண்ணத்தையும், கருத்தையும் சில தொழிற்சங்கங்கள் விதைக்க வேண்டாம்.
இந்த ஆண்டில் 2800 கோடி மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றவில்லை. தீபாவளி , பொங்கலில் கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த பிரச்சனைகள் இப்போது ஏற்படாதவாறு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” எனக் கூறினார்.