திமுக ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் சென்னையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.கழகம் ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் சிங்காரச் சென்னை, சிங்காரச் சென்னை 2.o என சென்னையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் சென்னை மாநகராட்சி இன்னும் பல உயரங்களைத் தொடுகிற வகையில், @chennaicorp சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தோம்.
மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். இந்நிகழ்ச்சியின் போது, சென்னையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் மாநகராட்சி – சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் – அலுவலர்கள் – பணியாளர்களை பாராட்டி உரையாற்றினோம். அவர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என உறுதியளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.