2,337 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 20,500 மகளிருக்கு ரூ.100.34 கோடி வங்கி கடன் இணைப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெண்களின் முன்னேற்றத்திற்கு பொருளாதார சுதந்திரமே தொடக்கப்புள்ளி என்பதை உணர்ந்து மகளிர் முன்னேற்றத்துக்காக கழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடெங்கும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,504 கோடி அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக, தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் 2,337 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 20,500 மகளிருக்கு ரூ.100.34 கோடி வங்கி கடன் இணைப்புகளை இன்று வழங்கினோம்.
மேலும், நம் மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில், ரூ.3.20 கோடி மதிப்பில் 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்கப்படுவதன் அடையாளமாக, 6 மின் வாகனங்களை ஈரோட்டை சேர்ந்த மகளிருக்கு வழங்கி வாழ்த்தினோம். தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்றவற்றின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி மகிழ்ந்தோம். பெண்களின் சுயசார்பு பொருளாதாரத்தை உறுதி செய்வதிலும், அவர்களின் வளர்ச்சியிலும் நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் உறுதியுடன் செயல்படுவோமென உரையாற்றினோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.