புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது; எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் சில தவெக கட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்து உற்சாகமாக கோஷமெழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி, “கொடி பறக்குது.. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியை துளைக்கும்..” என தவெக கூட்டணி குறித்து சூசகமான கருத்தை தெரிவித்திருந்தார்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், அதிமுக உதவியை நாடுவதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் இபிஎஸ் , தவெக உடனான கூட்டணி குறித்து சூசகமாக பேசியிருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இதற்கு விஜய் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதும் கூட்டணி தொடர்பான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக்கு புதிய அடிமையை தேடிக்கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக நிர்வாகி சுவாமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவுக்கு புதிய அடிமையாக அதிமுக கிடைத்துள்ளது. புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கட்டும்; எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. நம் கை நம்மை விட்டு எங்கும் போகாது. ‘எனது கையை’ சொன்னேன் வேறு எதையும் நினைக்காதீர்கள்” என்று கூறினார்.