முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர் என கூறினார். மேலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் என்றும், அவரது நூற்றாண்டு விழாவை நாடேகொண்டாடுவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல என்றும், இங்கே ஓர் இனத்தில் அரசு நடைபெறுவதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “கலைஞரின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை மற்றும் துணிச்சல்மிக்கவை என தெரிவித்தார். விளிம்பு நிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர் கலைஞர் என்றும், 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கலைஞருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கலைஞர் நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்
முன்னதாக, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.