இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்பக்காலத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த அவர், பின்னர் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அவர், வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’தொலைக்காட்சி தொடர் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரைக்கலைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “
தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.