பாஜகவை குறை கூற திமுகவிற்கு தகுதியில்லை – வானதி சீனிவாசன்
திருமண விழாவில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது தான் திராவிட மாடலா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “அம்பேத்கர் வழங்கிய சட்டத்தின் ஒரு அங்கம் தான் பொது சிவில் சட்டம். பொது சிவில் சட்டம் அனைவருக்கும் என்பதற்கான கருத்தை மோடி வெளிப்படுத்தி உள்ளார். அம்பேத்கர் சொன்ன பொது சிவில் சட்டம் மதக் கலவரததை உருவாக்கும் என முதலமைச்சர் கூறுகிறாரா? பாஜகவை குறை கூற திமுகவிற்கு தகுதியில்லை. திருமண விழாவில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது தான் திராவிட மாடலா? திருமண விழாவுக்கு சென்று அரசியல் பேசுவது அநாகரீகமானது. பாஜகவில் சாதாரண தொண்டர் கூட உயர் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுக குடும்ப அரசியல் செய்துவருகிறது.


திமுக வாக்களிப்பது என்பது குடும்ப ஆட்சிக்கு, நிர்வாக சீர்கேட்டுக்கு, ஊழலுக்கு வாக்களிப்பதற்கு சமம். ஏழை மக்களுக்காக முழுமையாக பணியாற்றுவது பாஜக அரசு. கொரோனா காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்கியது பாஜக அரசு. ராகுல்காந்தி எந்த ஒரு விஷயத்தையும் அரைகுறையாகவே பேசுவார். இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லிருக்கிறாரா? ஆனால் பிரதமர் இன்று பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் படத்திலும் சரி, வெளியிலும் சரி நன்றாக நடிக்கிறார்” என்றார்.


