தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பெரும்பான்மையை எட்ட இன்னும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில், விசிக சார்பிலான ஆதரவு கடிதம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, மிகுந்த உற்சாகத்துடன் “வெற்றி… வெற்றி… வெற்றி…” எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அவர் பேசுகையில், “அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும், கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், என் அண்ணன் மற்றும் ஆசான் திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ஜனநாயகம் காக்கப்படும். மக்களின் ஆதரவுடன் எங்களது தலைவர் விஜய் முதலமைச்சராக உருவெடுப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆதரவு அரசியல் சமன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் விரைவில் தீவிரமடையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!
