“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஒருபுறம் பாலியல் குற்றங்களும் மறுபுறம் லாக்-அப் மரணங்களும் அரங்கேறி வருகின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த தவெக அரசு, எப்போது தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காமராஜர் ஏழை மக்களின் எண்ணங்களைச் சிந்தித்துத் திட்டங்களைத் தீட்டியதால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்று குறிப்பிட்ட அவர், அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

”ஆளும் கட்சியினருக்கு ஒரு நீதி.. ஏழைகளுக்கு ஒரு நீதியா?”
நாகர்கோவில் கிளைச்சிறையில் நடந்த மாற்றுத்திறனாளியின் லாக்-அப் மரணம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெயகுமார் பதிலளித்துப் பேசியதாவது, ”ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியான தவெகவைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருட்களை வைத்திருந்தால் அவர்களைக் காவல்துறை உடனடியாக விடுவித்து விடுகிறது. ஈரோடு பவானியிலும், சேலத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்துவிட்டு, பின்னர் அப்படியே விடுவித்து விட்டார்கள். ஆனால், நாகர்கோவிலில் ஒரு ஏழை மாற்றுத்திறனாளியை அடித்துக் கொன்றுள்ளார்கள். ஆளும் கட்சியினருக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியுமா?”
”பத்திரிகையாளர்களைச் சந்திக்க அஞ்சும் முதலமைச்சர் விஜய்!”
தமிழகத்தில் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அரங்கேறி வரும் வேளையில், இதுவரை முதலமைச்சர் விஜய் அவர்கள் எந்தவொரு பிரச்சினைக்காவது பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்தித்து விளக்கம் கொடுத்திருக்கிறாரா அல்லது அவர்களை எதிர்கொண்டுள்ளாரா என்றால் இல்லை என்று சாடினார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை என்றும், அதிகாரிகள் மட்டுமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். பல இடங்களில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான டெண்டர்கள் இன்னும் போடப்படவில்லை என்றும், மழைக்காலம் வருவதற்கு முன்னதாக இந்தப் பணிகளை முடிக்கவே முடியாது என்றும் எச்சரித்தார்.
”பாம்பின் நிழலில் தவிக்கும் தவளைகள் போன்ற நிலையில் தமிழக மக்கள்”
தமிழகத்தில் மின்சாரத் துண்டிப்பு காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜெயகுமார், தற்போதைய மக்களின் நிலையை ஒரு பழமொழியோடு ஒப்பிட்டுப் பேசினார். ”வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தவளை ஒன்று படம் எடுத்து ஆடும் பாம்பின் நிழலில் ஒதுங்குவதைப் போல, ஆபத்தான ஒரு சூழலில்தான் தமிழக மக்கள் தவித்து வருகிறார்கள். மக்கள் எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஜய் அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது?” இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
