இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை ஈரான் வெளியிட்டு உள்ளது.
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரில் குறைந்தது 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவரான அப்பாஸ் மஸ்ஜெதி தகவல் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் நீதித்துறை சார்ந்த ‘மிசான்’ செய்தி நிறுவனம் மற்றும் பிற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. மஸ்ஜெதியின் கூற்றுப்படி, போரில் உயிரிழந்தவர்களில் நான்கு பேரைத் தவிர மற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டுவிட்டனர். உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் எத்தனை போ் என்பது குறித்த தெளிவான விவரங்களை குறிப்பிடவில்லை.

எனினும் இவா்களில் 2,875 பேர் ஆண்கள் என்றும், 496 பேர் பெண்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் உயிரிழந்தவர்களில் சுமார் 383 பேர் 18 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரான் முழுவதும் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் மீது கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சூழலில், உயிரிழந்தோர் பட்டியலில் பாதுகாப்புப் படையினர் சேர்க்கப்பட்டுள்ளார்களா, இல்லையா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பு (Legal Medicine Organization) இந்த குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியிருந்தாலும், ஈரானில் மனித உரிமை ஆர்வலர்கள் (HRANA) போன்ற பிற கண்காணிப்புக் குழுக்கள் போரினால் இன்னும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 3,700-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி உள்ளன.
மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்
