மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், தனது நாட்டில் அமெரிக்கப் போர் விமானங்களை நிலைநிறுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையின் நடுநிலைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 26 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இலங்கையிடம் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன.
அமெரிக்காவின் கோரிக்கை: ஜிபூட்டி (Djibouti) தளத்திலிருந்த வந்த அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள், மார்ச் 4 முதல் 8 வரை இலங்கையின் தென்பகுதியில் உள்ள மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவும் தங்கியிருக்கவும் அனுமதி கோரப்பட்டது. இந்த விமானங்கள் ஒவ்வொன்றிலும் தலா 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti-ship missiles) பொருத்தப்பட்டிருந்தன.

ஈரானின் கோரிக்கை: அதே காலகட்டத்தில், இந்தியாவில் கடற்படைப் பயிற்சியை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதி கோரியிருந்தன.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பேசுகையில், இரு தரப்பு கோரிக்கைகளையும் நிராகரிப்பதன் மூலம் இலங்கை தனது “அணிசேரா கொள்கையை” (Non-aligned policy) நிலைநிறுத்தியுள்ளதாக விளக்கினார்.
“எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதிலும் எமது நடுநிலைமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒரு தரப்பிற்கு அனுமதி வழங்கினால் மற்ற தரப்பிற்கும் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். சர்வதேச மோதல்களில் இலங்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என அவர் சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான், இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே ஈரானியப் போர்க்கப்பல் (IRIS Dena) மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய வீரர்களை இலங்கை கடற்படை மீட்டிருந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில், அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!
