வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும் கூடுதலாக 200 பில்லியன் டாலர் (சுமார் ₹18 லட்சம் கோடி) நிதி தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தொடங்கி 20 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பென்டகன் அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ள ரகசிய அறிக்கையில், போரின் தீவிரம் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் மிக வேகமாகத் தீர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ராணுவச் செலவினங்கள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, போர் தொடங்கிய முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் ₹94,000 கோடி ($11.3 billion) செலவிடப்பட்டுள்ளது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், போரின் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் ₹46,000 கோடி ($5.6 billion) மதிப்பிலான அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமெரிக்க ராணுவம் கோரியுள்ள ₹18 லட்சம் கோடி கூடுதல் நிதியானது, இதற்கு முன்பு உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர்களுக்காக அமெரிக்கா வழங்கிய மொத்த நிதியுதவியையும் விட அதிகம் என்பது, இந்த மோதலின் விஸ்வரூபத்தை உணர்த்துகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த நிதியானது அமெரிக்க ராணுவத்தின் வலிமையைத் தக்கவைக்கத் தேவைப்படும் “மிகச்சிறிய விலை” என்று கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில், எவ்வித தெளிவான இலக்கும் இல்லாமல் மத்திய கிழக்கில் முடிவில்லாத போருக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது ஏற்க முடியாதது,” என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் பதற்றம் நீடிப்பதால், போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
சிறப்புக் கட்டுரை : டிரம்ப் விளையாடுவது சதுரங்கம்; சீனா விளையாடுவதோ ‘கோ’ (Go)!
