உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம்
உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதும், கட்டிட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் மாற காரணமாக மாறியுள்ளது. செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஹாங்காங் 2வது இடத்துக்கு சென்றுள்ளது.
செலவுமிக்க நகரங்களில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா 3வது இடத்திலும், லண்டன் 4-வது இடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு சிங்கப்பூர் 13-வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. ரஷ்ய வெளிநாட்டினரின் வருகையால் துபாய் வாடகை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உயர்ந்து, 12-வது இடத்திற்கு தள்ளியுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர், பல நகரங்களில் வாடகை உயர்ந்துள்ளது. மேலும் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் செலவுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்வே, ஸ்வீடீஷ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் செலவுகள் என்பது குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.