கர்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 91 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழ காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால், அந்த அணைகளுக்கு வரத்தாகும் நீர் முழுமையாக காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 97 ஆயிரத்து 749 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரத்து 915 கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 664 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மாலையில் நீர்திறப்பு 91 ஆயிரத்து 546 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கே.ஆர். எஸ். அணைக்கு வினாடிக்கு 79 ஆயிரத்து 607 கனஅடி வரத்தாகும் நிலையில், காவிரியில் நீர்திறப்பு 58 ஆயிரத்து 546 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணைக்கு 36 ஆயிரம் கனஅடி வரத்தாகும் நிலையில், வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.