ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தது. சுமார் ஒரு வருடங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது. ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார். செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்ட வித்யகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதும் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது என்பது உறுதியாகிறது. எனவே செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமினை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் பெற்ற உடன் எப்படி மீண்டும் அமைச்சராகி விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்த வழக்கில் பல்வேறு சாட்சியங்கள் அரசு அதிகாரிகளாக உள்ளனர்! இந்நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சராக உள்ளதால் அவரால் வழக்கில் தலையிட முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இவ்விவகாரத்தில் மாநில அரசு என்ன சொல்ல வருகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த முறை இதே வழக்கு இதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பதில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாகவும், ஆனால் இப்போது வரை அதற்கான பதில் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை, தொடர்ந்து வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனவரி 15ம் தேதிக்குள் மனு மீது பதிலளிக்குமாறு உத்தரவிட்டுதோடு, இவ்வழக்கில் இடம்பெற்றுள்ள சாட்சிகள் எத்தனை பேர் அரசு பொறுப்புகளில் உள்ளனர்? என்பதற்கான விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.