மறைந்த நடிகரும் அரசியல்வாதிகமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவிற்கு நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். விஜயகாந்த் மறைந்து ஒரு வருடமான நிலையிலும் அவருடைய மறைவினால் பலரும் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர். அதேசமயம் கேப்டன் விஜயகாந்தை நினைவுகூரும் விதமாக நடிகர் விஜயின் கோட் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் காண்பிக்கப்பட்டார். அடுத்தது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் குறியீடுகள் பல இடங்களில் இருந்தது. அதிலும் அட்டகத்தி தினேஷுக்கு பில்டப் பாடலாக வரும் ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்’ எனும் விஜயகாந்தின் பாடல் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை விழாவாக நடத்த தேமுதிக கட்சியின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு திமுக, அதிமுக புளித்த அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.