கல்விக் கடனை வசூல் செய்த பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் -நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கல்வி கடனை முழுமையாக செலுத்திய பிறகும், தனியார் ஏஜென்சி மூலம் தொந்தரவு செய்த வங்கிக்கு, நுகர்வேர் கோர்ட்டில் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் வசித்து வருபவர் அணு பிரசாத் (35.) இவர் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் திருச்செங்கோடு கிளையில் கடந்த 2007 ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ 2,57,000 கல்வி கடன் பெற்றுள்ளார். அவர்களால் உரிய காலத்தில் தவணை தொகைகளை செலுத்த முடியவில்லை. கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதத்தில் மனோகரன், அணு பிரசாத் ஆகியோரிடம் இருந்து கடனை வசூலிக்க பேங்க் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், தந்தையும் மகனும் வங்கிக்கு சென்று கடனை ஒரே தவணையில் முடிக்கும் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை செலுத்தி கடன் நிலுவையில் இல்லை, என்ற சான்றிதழை வங்கியில் இருந்து பெற்றனர். இதன் பின்னரும் வங்கியால் கடனை வசூல் செய்ய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் அணு பிரசாத்தும், மனோகரனும் வங்கிக்கு ரூ 5,16,885 செலுத்த வேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தனியார் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து பேசுவதாகவும் அரசு வங்கியில் வாங்கிய கடனுக்கு ரூபாய் 7 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் சிலர் மிரட்டியுள்ளனர். வங்கி கடனை வசூல் செய்தபோதும், ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்பதும் கடன் ஒப்பந்தத்தை அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு வங்கி விற்றுவிட்டது என்பதும் அணு பிரசாத்துக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகனும் வங்கியின் மீதும், அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நுகர்வோர் கோர்ட்டில் இருந்து விசாரணைக்கு அழைத்தும், வங்கியும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை. வழக்கு தாக்கல் செய்தவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி திரு. ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை 4 வாரத்திற்குள் வங்கி வழங்க வேண்டும்.
கடன் நிலுவை இல்லை என்று சான்று வழங்கிவிட்டு, கடனை வசூலிக்க ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது தவறு என்று வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு 4 வாரங்களுக்குள் வங்கி கடிதம் வழங்க வேண்டும். தவறினால் கூடுதல் இழப்பீடாக ஒவ்வொரு நாளும் ரூ 5,000 வீதம் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு வங்கி செலுத்த வேண்டும். இந்தக் கல்விக் கடன் கணக்கு தொடர்பான வசூல் நடவடிக்கைகள் எதனையும் வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள் மீது ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.