பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மைசூரில் இருந்து வரும் 10ஆம் தேதி சேலம், திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் வரும் 11ஆம் தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் வரும் ஜனவரி 10ஆம் தேதி பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், அதே நாளில் மறுமார்க்கத்தில் சென்னை சென்டரலில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி, தாம்பரம் – திருச்சி மற்றும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே என 5 சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 2 ரயிகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேபோல், சபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வரும் 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், மறுமார்க்கத்தில் வரும் 16ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் வரும் 16ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், மறுமார்க்கத்தில் ஜனவரி 17ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.