தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தி பொறுப்பில்லாமல் ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டம், தார்வாட் நகரில் வசித்து வரும் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட் வயது 56. இவர் பெரும் செல்வந்தர். பல நூறு கோடிகளுக்கு அதிபதியான இவர் தனது சமுதாயத்தில் நற்மதிப்பு பெற்று பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 26 வயதில் இவருக்கு அகில் என்ற ஒரே மகன் இருந்துள்ளார்.


அகில் மது பழக்கத்திற்கு அடிமையாகி மேலும் பல்வேறு தவறான பழக்கவழக்கங்கள் கொண்டு ஊரை சுற்றி வந்துள்ளார். தந்தையின் தொழிலிலும் கவனம் செலுத்தாமல் இவரால் பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. அகில் நடவடிக்கையால் தனது சமுதாயத்தில் பல இடங்களில் பாரத் ஜெயினுக்கு பல கெட்ட பெயர்கள் வர துவங்கியது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ள நிலையில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி திடீரென அகில் காணாமல் போய்விட்டார். இதனால் பாரத் ஜெயின் மற்றும் உறவினர்கள், அகில் ஜெயினை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேஷ்வாப்பூர் போலீசில் உறவினர்கள் டிசம்பர் 3 ஆம் தேதி புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகில் ஜெயினை தேடி வந்தனர். இந்த வழக்கில் காவல்துறைக்கு எந்த துப்பும் கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகிலின் உறவினர் மனோஜ் என்பவர் தனது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்ததாகவும், அதில் மலை உச்சியில் இருந்து அகில் தற்கொலை செய்து கொள்வதுபோன்று பாவனை செய்திருப்பதாகவும் கூறி கேஷ்வாப்பூர் போலீசில் கூறினார். அந்த வீடியோவை அனுப்பிய தொலைபேசி எண் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

வீடியோவில் அகில் நின்ற மலை உச்சிக்கு சென்று அதன் சுற்றியுள்ள பகுதிகளை காவல் துறையினர் முழுவதுமாக ஆய்வு செய்தபோது அங்கு அகில் உடல் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறைக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அகில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களையும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்க துவங்கினர். விசாரணையின் போது அகில் தந்தை பாரத் ஜெயின் முன்னுக்கு முரணான தகவல்களை கொடுத்துள்ளார். அதே நேரம் அவரது தொலைபேசி எண்ணிலிருந்து அண்மையில் பல புதிய நபர்களுக்கு அவர் பேசியிருப்பது கண்டுபிடித்தனர்.
இதை எடுத்து அவரிடம் தீவிர விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மகனை கூலிப்படையை வைத்து கொலை செய்து குறிப்பிட்ட இடத்தில் புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அகில் மது, மாது, சூதாட்டம் என பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நிலையில் அவரது வீட்டில் தந்தை மகனுக்கு அடிக்கடி சண்டை இருந்துள்ளது. தந்தை மகனை கண்டித்த போது மகன் தந்தையை கொன்று விடுவதாக பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு புறம் சமுதாயத்தில் மகனால் தனக்கு கெட்ட பெயர் வந்து கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பாரத் மறுபுறம் மகனின் கொலை மிரட்டலை ஏற்றுக் கொள்ள முடியாமல் கூலிப்படையை சேர்ந்த 6 நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மகனை கொலை செய்துள்ளார்.

பாரத் தான் பயன்படுத்தி வந்த அதே தொலைபேசி எண்ணில் கூலிப்படையை அணுகியதும் அவர்கள் கொலை செய்த பிறகு உடலை கல்கட்டகி என்ற இடத்தில் புதைப்பதற்கு உதவியதும் புதைக்கப்பட்ட இடத்தின் வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்ததும் அவர் மாட்டிக் கொள்ள காவல்துறைக்கு உதவியுள்ளது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி தந்தை மகனிடம் ஒரு இடத்தை வாங்க வேண்டும் நேரில் சென்று பார்த்து வரலாம் என்று கல்கட்டகி பகுதிக்கு அழைத்து சென்று அங்கு கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த கூலிப்படையினரிடம் மகனை பிடித்து கொடுத்துவிட்டு வந்துள்ளார். அதே இடத்தில் அகிலை கூலிப்படையினர் கலுத்தை நெரித்து கொலை செய்து புதைத்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் கல்கட்டகிக்கு விரைந்து சென்று அகில் உடலை தோண்டி எடுத்த போது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல் கிடைத்தது. அகிலை கொலை செய்த பிறகு கூலிப்படையினர் அவரது உடலை துணியில் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகாய்த்தூளை நிரப்பி பின்பு ஜெயின் முறைப்படி சில சடங்குகள் செய்து புதைந்துள்ளனர். மோப்ப நாய் கண்டு பிடிக்காமல் இருக்க உப்பு மற்றும் மிளகாய்த்தூளை கொட்டி துணியில் மடித்து உடலை புதைத்துள்ளனர். ஒருபுறம் அகில் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் மறுபுறம் பாரத் ஜெயின் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மகாதேவ் நள்வாட் , சலீம் சலாவுதீன் ரஹ்மான் விஜய்பூர், பிரப்யா ஹிராமத், முகம்மத் ஹானிப் என மொத்தமாக 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கொலை குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையே மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.