spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!

-

- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளரும், தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காடுகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்குக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 27 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளரும், மூத்த தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய மையில் கல்லாக பார்க்கப்படுகிறது.

பசவராஜு,  கடந்த 1955ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜியன்னாபேட்டா கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். தனது சொந்த கிராமத்தில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்து, வாரங்கலில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தார். கல்லூரிப் பருவத்தில் மாவோயிஸ்ட் இயக்க மாணவர் சங்கத்தில் இணைந்த பசவராஜு பின்னர் அந்த இயக்கத்தின் செயல்படுகாளல் ஈர்க்கப்பட்டார். இதனால் படிப்பை பாதியிலேயே கைவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து முழுநேரமாக செயல்பட்டார். கெரில்லா போர் முறையில் நிபுணத்துவம் வாய்ந்தவரான பசவராஜு வெடிபொருட்கள் உருவாக்குவதிலும், அடர்ந்த வனப்பகுதியில் போரிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

மாவோயிஸ்ட் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு பின்னால் மூளையாகக் செயல்பட்டவராக பசவராஜு கருதப்படுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு தண்டேவாடாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 2013ஆம் ஆண்டுடு ஜீரம் காட்டியில் நடைபெற்ற தாக்குதலில், காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 2003ல் அலிபிரி குண்டுவெடிப்பு சம்பவத்தில், அப்போதைய ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.  2018ஆம் ஆண்டு ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் பசவராஜு மூளையாக செயல்பட்டுள்ளார்.

கேரளா வளா்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமா் மோடி பேச்சு

வினய், கங்கண்ணா, பிரகாஷ், பி.ஆர்., உமேஷ் மற்றும் கேசவ் உள்ளிட்ட பல மாற்றுப் பெயர்களால் அறியப்பட்ட பசவராஜு, அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்தார். மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த கணபதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளராக பசவராஜு உயர்த்தப்பட்டார். அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் அரசியல் மற்றும் ராணுவ முகமாகவும் கருதப்பட்டார். இந்நிலையில் பசவராஜுவின் மரணம் என்பது இந்தியாவில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில்  ஒரு விரிவான, கவனமாக திட்டமிடப்பட்ட தாக்குதலின் மணிமகுடம் ஆக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் பசவராஜு கொல்லப்பட்டதற்கு  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பசவராஜு கொல்லப்பட்டது “குறிப்பிடத்தக்க வெற்றி” என்றும், மாவோயிசத்தை ஒழித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதியை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ