spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆடியோவில் சிக்கிய நிகிதா! 6 வழக்குகளில் கைது! பதுங்கிய அண்ணாமலை!

ஆடியோவில் சிக்கிய நிகிதா! 6 வழக்குகளில் கைது! பதுங்கிய அண்ணாமலை!

-

- Advertisement -

அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா, போக்சோ வழக்கில் சிறை சென்ற பாஜக நிர்வாகிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், பாஜக உடன் தொடர்புடையவர் என்பதால் தான் அண்ணாமலை மௌனம் காப்பதாகவும் ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

அஜித்குமார் மரண விகாரத்தில் தலைமறைவாக இருந்து வரும் நிகிதா தொடர்ந்து வீடியோ மற்றும் ஆடியோக்களை வெளியிட்டு வருவது தொடர்பாக ஊடகவியலாளர் கரிகாலன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலையில் முக்கிய நபராக கருதப்படும் நிகிதா அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மற்றொருபுறம் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார். 2011ல் நிகிதா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 6 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரது தந்தையும் சில வழக்குகளில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராக நிகிதா பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2024ஆம் ஆண்டு துறையின் துணை தலைவராக பொறுப்பு வகித்தபோது, அவர் சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும் தரக்குறைவாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் பேசி வந்துள்ளார். மேலும் கல்லூரியின் முதல்வருக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக மாணவிகள், நிகிதாவை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கல்லூரி கல்வி இயக்குநகரக இணை இயக்குநர் கல்லூரிக்கு நேரில் சென்று புகாரை விசாரித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் நிகிதா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவிலை. 6 முறை நிகிதா கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்போதே அவரது பதவி பறிக்கப்பட்டிருக்க வேண்டும். மதுரை திருமங்கலம் சப் கோர்ட்டில் அவர் மீது பிடிவாரண்ட் உள்ளதாக ஒரு புகார்தாரர் தெரிவித்துள்ளார். அப்போதும் அவரது அரசு வேலை பறிக்கப்படவில்லை.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட கல்லூரி கல்வி இயக்குநரகம், நிகிதா விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவே ஒரு நேர்மறையான விஷயம்தான். உடனடியாக நிகிதாவை அரசுப் பணியில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும். உயர்கல்வித்துறை அதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நிகிதா, முதலில் நான் தலைமறைவாகவில்லை என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் முன்னுக்கு பின் முரணாக பல தகவல்களை தெரிவித்திருந்தார். கார் சாவியை அஜித்குமாரிடம் மட்டும்தான் கொடுத்தேன் என்று சொல்லி இருந்தார். அந்த வீடியோவில் அர்ச்சகரிடம் பூஜைக்காக சாவியை கொடுத்தேன். திரும்புகிறபோது சாவி இல்லை என்று சொல்கிறார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இரண்டாவதாக ஆடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அஜித்குமார் மரணத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அஜித்குமாரின் தாயாரிடம் மண்ணிப்பு கோருவதாகவும் நிகிதா தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் தங்களை பின்தொடர்வதால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து சாட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து விசாரித்து வருகிறார். அஜித்குமாரின் தாயார் நிகிதாவையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். காரில் பின் இருக்கையில் நகையை வைத்துக்கொண்டு எப்படி கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்திருப்பார்?  நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று ஊடக பேட்டிகள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நிகிதா வெளியிட்ட ஆடியோவில் தான் நாய்களை கூட மதிப்பேன் என்றும், ஆனால் தன்னை ஒருவர் நாயுடன் ஒப்பிட்டு தவறாக பேசிவிட்டதாகவும் சொல்கிறார். அவர் குறிப்பிடுவது பாஜக ஆதரவாளரான திருமாறன் ஆவார். திருமணம் முடிந்து பால் பழம் சாப்பிடும் நிகழ்வின்போது நிகிதா வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். இது நிகிதாவின் தந்தையிடம் கேட்டபோது நாய்க்கு சாப்பாடு வைக்க வேண்டும் என்பதால் அவர் வந்துவிட்டதாக சென்றுள்ளார். பின்னர் திருமாறன் வீட்டிற்கு சென்றபோது அவரை நிகிதா குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய விஷயம் என்ன என்றால் திருமாறனுக்கு அது முதல் திருமணமாகும். ஆனால் நிகிதாவுக்கு அது நான்காவது திருமணமாகும். அதன் பிறகு திருமாறன் மீது வரதட்சணை புகார் அளித்து, ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளி வந்திருக்கிறது. அந்த அறிக்கையில் அஜித்குமாரின் தலை முதல் பாதம் வரை அடிபடாத இடங்களே இல்லை. அவரது உடலில் வெளிப்புற காயங்கள் 50 இடங்களில் உள்ளன. உட்புற காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் என கொடூரமாக தாக்கியுள்ளனர். அவரது இடது கையில் சிகரெட்டால் சூடு வைத்திருக்கிறார்கள். அவரது மண்டையில் கட்டையால் தாக்கியதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயம், கல்லீரல் உள்ளிட்ட இடங்களிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் பல முறை தாக்கியதால் தசை நார்கள் கிழிந்துவிட்டன. இதில் அவரது ரத்தம் விஷமாக மாறியுள்ளது. இதனால்தான் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்துள்ளார்.

அஜித்குமார் கொலைக்கு எந்த அளவுக்கு தனிப்படையினரும், காவல்துறையும் காரணமோ, அதே அளவுக்கு நிகிதாவுக்கும் பங்கு உள்ளது. நகை திருட்டு புகாரே உண்மையா? என்பது தற்போது வரை மிகப்பெரிய சந்தேகம் நீடிக்கிறது. அஜித்குமார் விவகாரத்துடன் சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை ஒப்பிடுவது ஏன் என்றும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது ஏன் என்றும் நிகிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய 4வது கணவர் திருமாறன் புகார் தெரிவித்ததால் தான் இது குறித்து பேசுகிறோம். அவருடைய குற்றச்சாட்டு பொய் என்று எந்த இடத்திலும் நிகிதா மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

பாஜக பொருளாதார பிரிவின் மாநில நிர்வாகியான எம்.எஸ்.ஷா என்பருடன் நெருங்கிய தொடர்புடையவர் நிகிதா. அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். ஆனால் அந்த குற்றச்சாட்டை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவிக்கிறார். எம்.எஸ்.ஷா போன்ற குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருப்பவர்தான் நிகிதா. அதற்கு காரணம் இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். எல்லா விஷயங்களிலும் குதிக்கின்ற அண்ணாமலை இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார். அவர் ஏன் அமைதியாக உள்ளார் என்று கேள்வி எழுப்புகின்றனர். பாலியல் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் நிகிதா, தன்னிடம் படிக்கும் மாணவிகளை எப்படி நடத்துவார் என்கிற கேள்வி எழுகிறது. எனவே உயர்கல்வித்துறை உடனடியாக நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அரசுப்பணியில் இருந்து நீக்க வேண்டும். 15 வருடங்களாக பணத்தை இழந்து தவிப்பவர்களுக்கு, நிகிதாவின் சொத்துக்களை விற்பனை செய்து திரும்ப தர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ