கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், இதில் சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜயின் பேருந்தின் சக்கரத்தில் இருவர் சிக்கிய விவகாரத்தில் பேருந்தை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் போலீசார் விஜயின் வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், விஜயின் கேரவனை பறிமுதல் செய்வதற்கான முகாந்திரம் தெளிவாக தெரியவில்லை.

மற்றபடி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் மிகவும் சரியானதுதான். இந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும். அடிப்படையில் 2 விஷயங்கள் சேர்ந்துள்ளன. ஒன்று முன்ஜாமின் மனு. மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு. மற்றொன்று ஒரு நீதிபதி முன்பு வந்த பிற மனுக்கள். அந்த மனுக்களில் தனிப்பட்ட நபர் ஒருவர் மனுதாரராக இருக்கிறார். 3 பேர் எதிர்மனுதாரர்களாக உள்ளனர். அப்போது ரிட் வகையில் வரும்.
ரிட் மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும்போது எதிர் மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்கே வேண்டியதும் அவசியமாகும். வழக்கு தொடர்பாக நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் விஜய் தரப்பை பாதிக்கும். இயற்கை நீதியின் அடிப்படை என்பது ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாக மாற்றுத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்பதுதான். ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் கருத்தை அப்படியே விட்டுவிட்டால், அவர்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படும். எனவே விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்திற்கு செல்லக்கூடும். விஜயின் வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனாவுக்கு சம்மன் அளித்த நிலையில் அவர் ஒப்படைக்காதது தவறு ஆகும். அப்படி ஒப்படைக்காவிட்டால் சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டதாக புகார் எழும்
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் அவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை இல்லை. ஜெயலலிதாவை கலைஞர் அரசு கைது செய்தது பெரிய அரசியல் தவறாக மாறியது. அதனால் தான் ஸ்டாலின் அரசு விஜயை கைதுசெய்ய தயங்குவதாக நினைக்கிறேன். கரூர் சம்பவம் நடைபெற்ற உடனேயே விஜய் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்திருக்கலாம். ஆனால் அரசு அதை விரும்பவில்லை. அதனால்தான் ஆனந்த், நிர்மல்குமாருக்குமே ஒரு வாரம் அரசு அவகாசம் வழங்கி உள்ளது. இந்த வழக்கிறல் தற்போது விசாரணை அதிகாரி எஸ்.ஐ.டி அதிகாரி அஸ்ரா கார்க்தான். இந்த வழக்கில் கரூர் டவுன் காவல் ஆய்வாளர், உதவி விசாரணை அதிகாரியாக மாறியுள்ளார்.
எப்.ஐ.ஆர் விவகாரத்தில் எஸ்.ஐ.டி விசாரணை அதிகாரி அதே எப்.ஐ.ஆரை வைத்து விசாரிக்கலாம். அல்லது புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். உயர்நீதிமன்றத் தீர்ப்பில் அவருக்கு தேவையான அதிகாரிகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் தேவையான வற்றை எடுத்துக்கொள்வார். எனவே தடய அறிவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் என தேவையானவர்களை அஸ்ரா கார்க் எடுத்துக்கொள்வார். இப்படி விசாரணைக்குழுவை அமைத்த பின்னர்தான் எப்.ஐ.ஆர் போட முடியும். எனதே அதற்கு சில நாட்கள் ஆகலாம். கடந்த முறை எப்.ஐ. ஆரில் விஜயின் பெயரை சேர்க்கவில்லை. இம்முறை அந்த தவறை சரிசெய்வார்கள். காரணம் புதிய எப்.ஐ.ஆர் விரிவாக இருக்க வேண்டும். அதற்கு நாட்கள் ஆகும்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இவ்வளவு கூட்டநெரிசல் மிகுந்த இடத்தில் யாராக இருந்தாலும் போடக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கியது முதல் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது. கூட்டநெரிசலில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியது. மருத்துவ செலவு, முதலமைச்சர், அமைச்சர்கள் சென்றது, வழக்கு செலவு என்று விஜய் கட்சியை வளர்க்க, பொதுமக்களின் வரிப்பணம் ரூ.100 கோடி வரை செலவாகியுள்ளது. ஊருக்கு வெளியில் கூட்டம் போட்டிருந்தால் அவருக்கு பல கோடிகள் செலவாகும். அதை தவிர்ப்பதற்காக எங்கள் ஊரில் வந்து பிரச்சாரம் செய்தால் என்ன அர்த்தம் என்று மக்கள் கேட்கிறார்கள். அப்போது இறந்து போனவர்களுக்கும் நஷ்டம், அங்கு இருப்பவர்களுக்கும் நஷ்டம்.
அப்போது, இதெல்லாம் வருங்காலத்தில் நாம் மிகவும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்கிற நிலைக்குதான் செல்லும். அரசியல் தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்ய ஊருக்குள் இடமில்லை. அப்போது ஊருக்கு வெளியேதான் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய முடியும். விஜய்க்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர் கூட்டம் போட வேண்டிய இடம், ஊருக்கு வெளியில்தான். நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் தொண்டர்கள் அங்கே வரப் போகிறார்கள். அதற்கு விஜய்க்கு வலிமை இல்லை. உயர்நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் இதைநோக்கி செல்கிறது என்பது எனக்கு ஒரு மகிழ்ச்சி. கரூரில் 41 பேர் இறந்தது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். ஆனால் இதன் மூலமாக நாம் எதிர்காலத்தில் இருக்கிற தலைமுறையை, அல்லது நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற தலைமுறையை காப்பாற்றுகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.