கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியிருக்கும் பகுதிகளில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் வரை எந்த கட்சியின் பிரச்சாரத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சரியான நிலைப்பாடுதான். முன்பே இதை எடுத்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். விஜயின் திருச்சி கூட்டத்திலேயே இது தெரிந்தது. எங்கு அடிபட போகிறார்கள் என்கிற பயம் அப்போதே வந்துவிட்டது. அவர்களின் நடவடிக்கையை பார்த்தாலே அது புரிந்தது. அரசுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். மிகவும் கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது என்றுதான் நான் பார்க்கிறேன்.
முதல் கூட்டத்திலேயே விஜய் எந்த நிபந்தனைகளையும் கடைபிடிக்கவில்லை. 3 கூட்டங்களை ஏற்பாடு செய்து, 2 தான் போனீர்கள். இரண்டாவது கூட்டத்திற்கே நள்ளிரவு 12 மணியாகிவிட்டது. அப்போது அந்த இடத்திலேயே உங்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் புகார் அளித்து, அடுத்த கூட்டம் எதுவாக இருந்தாலும் இவற்றை எல்லாம் சொல்லியிருக்க வேண்டும். அந்த அரசியல் உறுப்பாடு காட்டப்படவில்லை. குறைந்தபட்சம் தற்போது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகாவது அந்த உறுதிப்பாடு காட்டப்படும் என்று நான் நினைக்கிறேன்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பேஸ்கட் பால் போட்டியை தொடங்கி வைக்க சென்றுள்ளார். கட்சி இவ்வளவு ஆபத்தில் இருக்கும் போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட புரோகிராம். அதை தொடங்கி வைக்கப் போகிறேன் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. அப்போது உங்களுக்கு கட்சி மீதோ, மக்கள் மீதோ அக்கறை இல்லை என்றுதான் அர்த்தம். ஆதவ் குடும்பம் லாட்டரி விற்பனை செய்கிற குடும்பம். அந்த தொழில் வடஇந்திய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் தான் இருக்கிறது. உத்தரகாண்ட் மாநில அரசின் சிறப்பு விருந்தினராக செல்கிற அளவுக்கு நீங்கள் என்ன அரசியலில் இருந்தீர்களா? அல்லது பதவியில் இருந்தீர்களா? என்றால் எதுவும் கிடையாது.
நிகழ்ச்சிக்கு முன்பே ஒத்துக்கொண்டிருப்பீர்கள் என்றாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு அதை ரத்து செய்திருக்க வேண்டும் அல்லவா? அதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது. அப்போது நீங்கள் தப்பியோடுகிறீர்களே. அங்கிருந்து அப்படியே நேபாளத்திற்கே ஓடிவிடுவீர்களா? ஏனென்றால் உங்களுக்கு நேபாள ஜென் ஸீ புரட்சி பிடிக்குமே? ஆதவ் விவகாரத்தில் நீதிமன்றம் உறுதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்போது ஆதவ் எஸ்கேப் தான், விஜய் எஸ்கேப், கரூரில் உள்ள தவெக நிர்வாகிகள் எஸ்கேப் என்றால்? அப்போது இந்த நிகழ்வுக்கு யார்தான் பொறுப்பேற்று கொள்கிறார்கள்?
எப்போது ஒரு நிகழ்வுக்கு பொறுப்பேற்றுக்கொள்கிற உண்மைத் தன்மை உங்களிடம் இல்லையோ? அப்போதே நீங்கள் அரசியலுக்கு தகுதி அற்றவர் ஆகிவிடுகிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால் எந்த ஒரு அரசியல் தலைவரும் ஓடி வந்து விடுவார்கள். கருருக்கு யாரெல்லாமோ வந்ததை பார்த்தோம். ஆனால் வந்தது பாஜக – என்டிஏ குழு. எஸ்சி, எஸ்டி ஆணையம் வருகிறது. அப்போது பாஜக இதை பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் என்ன புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றால்? திமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை விஜய் எடுத்துவிடுவார் என்று பேச்சு இருந்தது. தற்போது பாஜக களத்தில் இருக்கிறது என்று தெரிந்தால், சிறுபான்மை மக்களின் வாக்குகள் முழுக்க முழுக்க திமுகவுக்கு தானே செல்லும்.
விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகும் 20 – 25 வயதுடையவர்கள் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள். ஆனால் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு விஜயின் செயல்பாடுகள் காரணமாக மன மாறுதல் ஏற்பட்டிருக்கும். இவர்கள் எல்லாம் அதிமுக – பாஜகவுக்கு வாக்களிக்காமல் பழையபடி சீமானுக்கே தான் வாக்களிப்பார்கள்.
விஜய் மீண்டும் அரசியலை தொடருவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த தவறுகளை களைந்து வந்தார் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலிமையான அரசியல் தலைவராக உருமாற முடியும். இவை எல்லாம் அடுத்த அடுத்த நாட்களில் தெரியவரும் என்பது ஒரு வழக்கறிஞராக என்னுடைய பார்வையாகும். கரூர் நிகழ்வில் இருந்து ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். விஜய்க்கு உண்மையிலேயே அக்கறை இருக்கும் என்றால் அவர் உண்மையில் கூட்டம் போட வேண்டிய இடம் ஊருக்கு வெளியில் தான். இளைஞர்கள் ஒரு 10 கிலோ மீட்டர் சென்று உங்கள் பேச்சை கேட்கப் போகிறார்கள். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எல்லாம் இதை நோக்கி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.