கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில் வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வேலூரில் நடைபெறும் தவெக கூட்டத்திற்கு அனுமதி கோருகிறபோது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீங்கள் ஏன் மாநாட்டிற்கு பந்தல் அமைப்பதில்லை, இருக்கைகள் போடுவதில்லை என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். விஜயை பார்க்க வேண்டும் என்று அவருடைய கட்சி கூட்டத்திற்கு வந்து வெயிலில் சுருண்டு விழுந்து சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்தபோது நீங்கள் பதறினீர்களா?
அவருடைய உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் போராடியபோது, அசிங்கமாகிவிடும் என்கிற நிலைமை வந்தபோது ரூ.5 லட்சம் பணம் கொடுத்தீர்கள். விஜயை தவிர வேறு எந்த அரசியல் கட்சி தலைவராவது உச்சி வெயிலில் கூட்டத்தை நடத்தியுள்ளாரா? ஜோதிடர் சொன்னார் என்பதற்காக விஜய் இப்படி உச்சி வெளியிலில் கூட்டத்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் மாலை வேளையில் தான் கூட்டங்களை நடத்துவார்கள். ஆனால் எந்த கட்சியிலும் இல்லாத வினோதத்தை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு அடிப்படையில் மனித பண்பு என்பதே கிடையாது. சக மனிதர்களின் துக்கத்தில் அவருக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பதை சாவு விழுந்த வீட்டில் இருந்து அவர் வேகமாக ஓடிவந்ததை நாம் பார்த்தோம். ஒரு இரங்கல் தெரிவிப்பதற்கு கூட 72 மணி நேர இடைவேளை தேவைப்படுகிறது அவருக்கு. அவர் இன்னும் சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர, அவருக்கு இன்னும் ஜனநாயக பண்பு இல்லை. சாதாரண மனிதனை நோக்கி பயணிப்பதுதான் ஜனநாயகம். எனக்காக முண்டியடித்துக்கொண்டு நீ செத்தாலும் கவலைப்பட மாட்டேன் என்று சொல்வது சர்வாதிகாரமாகும்.
மன்னராட்சியை பற்றி விமர்சிக்கிறார் விஜய். உண்மையில் மன்னரை போன்று அவர்தான் நடந்துகொள்கிறார். பனையூர் பங்களாவைவிட்டு வெளியேற மறுக்கிறார் அவர். கட்சி நிர்வாகிகளை கூட அவர் சந்திப்பது கிடையாது. இப்படி எப்போதும் தனிமையிலேயே இருக்கும் அவர் எப்படி அரசியல்வாதியாக முடியும். ஜனநாயகன் என்று படம் எடுக்க முடியுமே தவிர, நீங்கள் ஒரு ஜனநாயக சக்தியாக மாற முடியாது.

விஜயால் 5000 பேரை கூட்டி ஒரு கூட்டம் நடத்த முடியவில்லை என்றால், அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்களா? என்று விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் விஜயை யாரும் ஒடுக்கவில்லை. அவருடைய கட்சியின் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது. 180 தொகுதிகளுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். 70 தொகுதிகளுக்கு மேலாக திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் கூட்டங்கள் நடத்தப் பட்டிருக்கிறது. எத்தனையோ இடங்களுக்கு பிரதமர், முதலமைச்சர் செல்கிறார்கள். தடையை மீறி தான் அனைத்து போராட்டங்களும் நடத்தப்படுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கும் நிபந்தனைகளை விதிக்காமல் அனுமதி தருவது கிடையாது.
விஜய் கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணம் அவர் கட்சியினரின் ஒழுங்கின்மையாகும். தவெக தரப்பில் 234 தொகுதிகளிலும் வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி செய்தால் நோட்டாவுக்கு கீழாக தவெக சென்றுவிடும். விஜயை விட பல மடங்கு வசீகரம் கொண்ட எம்ஜிஆர் சாதாரண மக்களோடு பழகியவர் தான். சாமானிய மக்களோடு கைகுலுக்கி கொண்டவர்கள் தான் மக்கள் தலைவராகி உள்ளனர்.

தவெகவை ஒரு அரசியல் கட்சியாக யாரும் மதிப்பதில்லை. காங்கிரஸ்காரர்கள் கூட தவெகவை காண்பித்து பேரம் பேசுகிறார்களே தவிர, அவருடன் கூட்டணி செல்ல மாட்டார்கள். செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்ற தனி மனிதர்கள் தான் அவரிடம் சென்றுள்ளனர். களப்பணி செய்யாதவர்கள், கருத்தியலாக நிற்காதவர்கள் யாருமே அரசியலில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்பதற்கு, விஜய் ஒரு உதாரணம். 2026 தேர்தலுடன் விஜய் என்கிற மாய பிம்பம் கலைக்கப்படும். டிடிவி தினகரனுக்கு வராத கூட்டமா? வைகோவுக்கு வராத கூட்டமா? இதைவிட பிரம்மாண்டமான எத்தனையோ கூட்டங்களை தமிழ்நாடு பார்த்துள்ளது. அதைதான் உலக நாயகன் கமல், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்று சொன்னார்.
திரும்பி போவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் பன்ச் டயலாக் பேசிக்கொண்டிருந்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட அவரால் ஆக முடியாது. முதலமைச்சர் ஆவது என்பது பெரிய கனவு. அவர் ஒருநாளும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக கூட முடியாது. கமல் கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். கட்சி வளராமல் போனது. அதேபோல் விஜய் கட்சி தொடங்கிவிட்டு பனையூர் பங்களாவில் படுத்துகிடந்தால் உங்கள் கட்சி ஒருநாளும் ஆட்சிக்கு வராது. விஜய் சினிமாவில் தான் ஹீரோ. அரசியலில் அவர் ஜீரோ, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


