பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பு.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலருக்கு புகார் சென்றது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் லலிதா, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ் ஆகியோர் நேற்று மாலை குறிப்பிட்ட விடுதிக்கு சென்ற போது இருவர் பணத்துடன் தப்பி செல்ல முயன்றனர். காவல்துறையினர் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து பெரியபாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருத்தணியை சேர்ந்த ஸ்டீபன் தமிழரசு (45), கடம்பத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி (38) இவர்கள் அரசு அலுவலகங்களில் தகுதி அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியலை சட்டவிரோதமாக சேகரித்து அவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பேரம் பேசி பணம் வசூல் வேட்டை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்த ரூபாய் 3.6லட்சம் ரொக்கத்தையும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். அரசு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மோசடி செய்து பண வசூல் செய்த இருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.