இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள் தொடர்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லாதபோது, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் என்பது அவர் ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் தெரிவித்துள்ளார்.

இந்துசமய அறநிலையத்துறை கோவில்கள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள் பாஜகவோடு கூட்டணிக்கு போயிருக்கிறார்கள். ஆனால் யாராவது தனித்தன்மையை இழந்திருக்கிறார்களா? தங்களுடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்படுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணம் தொடங்குவதற்கு முதல் நாளில் அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அன்வர்ராஜா சொல்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலிலதா போன்றவர்கள் தங்களுடைய தனித்தன்மையை விட்டுக்கொடுத்தது கிடையாது. ஜெயலலிதாவும் சில தவறுகளை செய்தார். தேர்தல் தோல்வி வந்த உடன், தம்மை மாற்றிக்கொண்டார். ஆனால் அந்த தன்மை எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. தமிழகத்தை காப்போம் என்று எடப்பாடி சொல்கிறார். அதிமுகவை மீட்போம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் கட்சியை தொடங்கியபோது, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, வலம்புரி ஜான், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் இருந்தனர். ஜெயலலிதா வந்ததும் தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களை நீக்கிவிட்டார். கடைசியில் தற்குறிகள், அரசியல் பார்வையற்றவர்கள், மோடி எங்கள் டாடி என்று பாட்டு பாடுபவர்கள் வரை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக உருவாக்கினார். சசிகலா கட்சியை ஏலம் விடுகிறபோது அதிமான தொகைக்கு ஏலத்தில் எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. பணம் கட்ட முடியாமல்தான் செங்கோட்டையன் பின்தங்கிவிட்டார். கட்சியை ஏலத்திற்கு எடுத்ததால் எடப்பாடிக்கு கொள்கை, கோட்பாடு என்றால் என்ன என்று தெரியவில்லை. அண்ணாவை குறித்தும் தெரியவில்லை. மகன் மாட்டிக்கொண்டான், சம்பந்தி பக்கமும் பிரச்சினை என்பதால் எல்லாம் லாக் ஆகிவிட்டது.
எடப்பாடி பழனிசாமியின் நிலைமை எவ்வளவு பரிதாபமாக போய்விட்டது என்றால் திடீரென திருமாவளவனை திட்டுகிறார். திடீரென கம்யூனிஸ்ட் கட்சிகளை திட்டுகிறார். நீங்கள் எல்லாம் காப்பாற்றாமல் விட்டு விட்டீர்களே. நான் தனியாக பாஜகவிடம் மாட்டிக் கொண்டேன் என்பதால் தான் எடப்பாடி இப்படி திட்டுகிறார். மற்றொருபுறம் பாஜக சொல்வதையும் பேசுகிறார். கிளிப்பிள்ளை போல அவர்கள் எந்த சீட்டை எடுக்க சொல்கிறார்களோ, அந்த சீட்டை எடுக்கிறார். கிளி கூட சுதந்திரமாக எடுக்கும். எடப்பாடி சொல்லிவைத்த சீட்டுகளை மட்டும் எடுக்கிறார். கோவில் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை அறப்பணிகளுக்கு தான் கொடுக்கிறார்கள். அன்னதானம் கொடுப்பதை குற்றமாக சொல்ல முடியுமா? அண்ணாவின் பெயரில் ஏன் அன்னதானம் வழங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொல்லி இருக்கிறார். அப்போது பாஜகவினர் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை போன்று திரும்ப சொல்கிற இடத்திற்கு எடப்பாடி வந்துவிட்டார் என்றாலே, அதிமுக தலைமைக்கு அவர் பொறுத்தமற்றவர் என்கிற இடத்தை நோக்கி நகர்கிறார்.
அறநிலையத்துறை என்பது ஆத்திகர்களால் உருவாக்கப்பட்டது. கோவில்களில் வரக்கூடிய வருமானத்தில் அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், ஜமீன்தார்கள், கோயில் அறங்காவலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். அதை ஒழுங்கு படுத்துவதற்காக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு அறநிலையத்துறையில் இருந்து வரக்கூடிய வருமானத்தில் இருந்து கல்லூரி, பள்ளி கட்டுவதற்கு அனுமதிக்கலாம் என்று பக்தவட்சலம் முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் காமராஜர்.
1963ல் குற்றாலத்தில் பராசக்தி கல்லூரி, பழனியில் பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் பின்னர் 2021ல் திமுக அரசு 6 இடங்களில் கல்லூரிகளை தொடங்கியுள்ளது. பக்தவட்சலம் கொண்டுவந்த கல்லூரியை தொடர்வதில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி எந்த கட்சிக்கார் என்று அதிமுகவினருக்கே குழப்பம் வருகிற அளவுக்கு அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையாக மாறிவிட்டார்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏறத்தாழ 35 ஆயிரம் பேர் படிக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஏழை, எளிய இந்துக்கள்தான். அப்போது அவர்களின் கல்வி உரிமையில் மண்ணை அள்ளிப்போடுகிற வேலையை எடப்பாடி பழனிசாமி எதற்காக செய்கிறார். அடிப்படை அறிவுக்கூடவா ஒருவருக்கு இல்லாமல் இருக்கும். நீங்கள் எல்லாம் ஒரு அரசியல்வாதியா? ஒரு அரசியல் கட்சியின் பொதுச்செயலாளரா? ஆர்எஸ்எஸ்-காரர்களின் குரலாக நீங்கள் ஒலிக்கலாமா? இதை அதிமுக தொண்டன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். எடப்பாடி பழனிசாமி நடைபயணம் போக போக கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த தேர்தலோடு அதிமுக முடிந்துவிடும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமை முடிந்துவிடும் என்கிற இடத்தை நோக்கி நகர்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய தனித்துவத்தை அவர் நிரூபிக்கவே இல்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். திமுக மீது அவர் வைத்த விமர்சனங்களோ, குற்றச்சாட்டுகளோ எதிலாவது வெற்றி பெற்று இருக்கிறாரா?
எடப்பாடி எந்த குற்றச்சாட்டு வைத்தாலும், திமுகவினர் சுதாரித்துக்கொண்டு சரிசெய்து விடுகிறார்கள். திருப்புவனம் இளைஞர் மரணத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே நிறைவேற்றி விட்டார்கள். காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இதை வைத்து அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு சர்க்கஸ் சிங்கமாக உள்ளார். தன்னால் கட்சியை காப்பாற்ற முடியும் என்று அதிமுக தொண்டர்களிடம் அவரால் நிரூபிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் மேலிடம் முடிவு செய்யும் என்கிறார்கள். அமித்ஷா தான் அவர்களின் முதலாளி என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க நான் ஏன் அதிமுகவுக்கு ஓட்டுபோட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்தின் வழியாக கொஞ்சம் இருக்கும் மரியாதையும் போக போகிறது. இவரது நடை பயணம் என்பது திமுகவை வெற்றிபெற வைப்பதற்காக நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கோவில் பணத்தில் இருந்து கல்லூரி கட்டினால் அந்த மாணவர்கள் படித்து மேலேதானே வரப் போகிறார்கள். கல்லூரிகள் இருக்கக்கூடாது, இடஒதுக்கீடு இருக்கக்கூடாது, சமுகநீதி குறித்த பார்வை இருக்கக்கூடாது என்று எடப்பாடி விரும்புகிறார் என்றால் அவர் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டாரா? எடப்பாடி அதிமுகவின் பொதுச்செயலாளரா? அல்லது பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா?
எடப்பாடி பழனிசாமி நடைபயணம் செல்வதற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு கட்சியில் செல்வாக்கு உள்ளது என்பது உண்மை என்றால்? எதற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே அவர் ஒய் பிளஸ் பாதுகாப்பில் தான் உள்ளார். தன் சொந்த கட்சிக்காரர்களிடம் இருந்து கல்லடி வாங்காமல் இருப்பதற்காக தான் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். பொதுக்குழு வைத்து ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசினார்களோ அதுபோல அழுகிய முட்டையை வைத்து தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக தான் எடப்பாடிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அவர் மக்களை நம்பியோ, தொண்டர்களை நம்பியோ பயணிக்கவில்லை. வழக்கி இருந்து எப்படியாவது விட்டுவிடுங்கள் என்று ஒரு மறைமுக கெஞ்சலாகத்தான் எடப்பாடியின் பேச்சு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.