தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக – பாஜக இடையே கூட்டணி உருவானதில் என்னுடைய பங்கு இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் என்னுடைய பங்கு இல்லை. அப்படி இருக்கிறபோது என்னுடைய தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். கூட்டணி ஆட்சிதான் என்று பத்திரிகைகளில் மூன்று முறை அமித்ஷா தெளிவுபடுத்தி விட்டார். ஒரு தொண்டனாக என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு கூட்டணி ஆட்சி இல்லை என்று சொன்னேன் என்றால், இந்த கட்சியில் தொண்டனாக இருக்க எனக்கு தகுதியில்லை என்றுதான் அர்த்தம். என்னுடைய தலைவர் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாமல், என்னுடைய தலைவர்களின் கருத்தை வலுப்படுத்த முடியாமல், அதில் சந்தேகம் எழுப்பினேன் என்றால் நான் இந்த கட்சியில் தொண்டனாகவோ, தலைவனாகவோ இருக்கக்கூடாது.
என்கட்சி தலைவர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று பேசிய பின்பும், நான் அதை தூக்கிப் பிடிக்கவில்லை என்றால், எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம். என்னுடைய தலைவர்கள் சொல்லாத வரை நான் எப்படி கட்சி எடுத்த நிலைப்பாட்டில் இருந்து பின்னால் போக முடியும். பாமக தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேமுதிக பிரேமலதா போன்றவர்களும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இன்றைக்கு தமிழக அரசியலில் அனைத்துக்கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேச தொடங்கியுள்ளனர்.