என்.கே.மூர்த்தி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் எழுதாத ஒரு போலியான திருக்குறளை எழுதி பரிசு கேடயத்தில் பதித்திருக்கிறார்கள்.


ஜூலை- 13 ஆம் தேதி “வள்ளுவர் மறை, வைரமுத்து உரை” என்ற நூலை சென்னை காமராஜர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பங்கேற்றனர். கவிஞர் வைரமுத்து எழுதிய அந்த நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருவள்ளுவரையும், திருக்குறளையும் இழிவு படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என். இரவி ஈடுப்பட்டுள்ளார்.
திருக்குறள் நூலில் இல்லாத “செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்போடு மன்னுஞ்சொல் மேல்வையப்பட்டு” – (திருவள்ளுவர் 944) என்ற ஒரு போலியான குறளை மருத்துவர்களுக்கு வழங்கிய பரிசு கேடயத்தில் பதித்திருக்கிறார். இதுவரை தமிழர்கள் கேள்விப்படாத, படிக்காத ஒரு குறளை திருவள்ளுவர் எழுதியதாக ஒரு கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி.
தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் எல்லோர் மீதும் எழாத கோபமும்,எதிர்ப்பும், வெறுப்பும் தற்போது பதவியில் உள்ள ஆளுநர் ஆர்.என்.இரவியின் மீது வந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழர்களையும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசாங்கத்தையும் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு 1967 முதல் இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. அடிப்படை கல்விக்கு தாய்மொழியும், உலகத்தை தொடர்புகொள்ள ஆங்கிலமும் போதும் என்று இருமொழி கொள்கையை பின்பற்றி வருவதால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இருமொழி கொள்கையில் படித்தவர்கள் உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்து வருகிறார்கள். அதை ஆளுநர் ஆர்.என்.இரவி தவறான கல்வி கொள்கை என்று விமர்சனம் செய்கிறார். தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது என்று ஒரு பொய்யை பரப்பினார். மேலும் தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் கூடுதலாக இந்தியும் படிக்க வேண்டும் என்று விவாதமாக மாற்றினர்.
அதற்கு அடுத்து திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார் போன்ற அறிஞர்கள் சனாதனத்தை பின்பற்றியவர்கள், தமிழ்நாடு சனாதனத்தை பின்பற்றுகிற ஆன்மீக மண் என்று புதிய சர்ச்சையை கிளப்பினார். திராவிடம் காலாவதியாகி விட்டது. தமிழ்நாடு திராவிடத்தினால் வளரவில்லை. சனாதனத்தாள் தான் வளர்ந்தது என்று ஆர்.என்.இரவி மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்கலாம் என்று ஆர்.என்.இரவி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார். தமிழ்நாடு லோகோவை கூட பயன்படுத்த மறுத்தார். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் ஒருசேர சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றியதால், ஒருவழியாக அவர் கருத்தை அவரே மாற்றிக்கொண்டு தமிழ்நாடு என்று எழுதத் தொடங்கினார்.
அது அடங்கி முடிவதற்குள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும்போது “திராவிட நல் திருநாடும்” என்கிற வரியை பாடமறுத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடித்தார். தமிழர்களின் மரபுகளை சிதைக்க முயற்சித்தார். அப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கம் போன்று சீற்றம் கொண்டர்.
அடுத்தது ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள திராவிடம், கலைஞர், அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் தவிர்த்தார். அதை சபாநாயகர் தமிழில் வாசித்து தலைவர்களின் பெயர்களை அவை குறிப்பில் இடம்பெற செய்தார். ஆளுநர் ஆர்.என்.இரவி சட்டமன்றத்திற்குள் வருவதும், எதிர் கட்சியினரை போன்று வந்த வேகத்தில் வெளியேறுவதையும்சிறிதும் வெட்கப்படாமல் செய்து வந்தார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று துடித்தார், முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஒருவரை அமைச்சர் பதவியில் சேர்ப்பதும், நீக்குவதும் முதலமைச்சருக்கு உள்ள அதிகாரம் என்பதை ஆளுநருக்கு தெரியாமல் போனது வெட்கக்கேடானது.

ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அவரே அறிவித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். அவருக்குள்ள அதிகார எல்லையை மீறி, சந்திரமுகியாக மாறி அந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்படி, அவர் அறிவித்த அந்த உத்தரவை ஐந்து மணி நேரத்தில் அவரே ரத்து செய்தார். இந்த நிகழ்விற்குக் கூட அவர் சிறிதும் வெட்கப்பட வில்லை. உடனே அடுத்த நாள் திருவள்ளுவருக்கு காவி சாயம் அடித்து அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்தார்.
இப்படி ஒவ்வொரு செயலாக செய்வது, ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவது, அதை இரண்டு மூன்று நாட்கள் விவாதமாக மாற்றுவது, அது தவறு என்றும், சட்டப்படி குற்றம் என்றும் பலர் கண்டித்த பிறகு அவர் கருத்தில் இருந்து பின்வாங்கிக் கொளகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவரை பலமுறை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது, அதற்காக அவர் துளியளவு கூட வெட்கப்பட்டதாகவோ , வறுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.
தற்போது திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை அவர் எழுதியதாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ந்து தமிழர்களின் மொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கிறார். அவர் அதிகாரத்தின் எல்லையை மறந்து அத்துமீறி செயல்படுகிறார். இதனை தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசுவது, திருக்குறள் நூலில் இல்லாத குறளை சமூகத்தில் பரப்புவது என்பது தமிழர்களின் ஆணி வேரை அசைத்து பார்க்கின்ற முயற்சி! இது மன்னிக்க கூடாத குற்றம் . எல்லோரும் கண்டிக்க வேண்டும்.