தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள அரசியல் சதி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :- அமலாக்கத்துறையின் வருகை என்பது பாஜகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்பதைதான் காட்டுகிறது. திமுகவுக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவுகிறபோது அதனை தகர்த்து எரிந்து திமுக எழுந்து நிற்கும். திமுகவை அமலாக்கத்துறையை காட்டி அச்சுறுத்தலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. இன்னுமா நீங்கள் தமிழ்நாட்டின் அரசியலை புரிந்துகொள்ளவில்லை. போனில் அமலாக்கத்துறை வருகிறது என்று மிரட்டிய உடன் ஒரே இரவில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விமானம் பிடித்துச்சென்றார். அதுபோன்று திமுகவை வர வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். மோடி வந்தாலும், ஈடி வந்தாலும் அதை சமாளிக்க தயார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அறைக்கூவல் விடுத்தார். அதை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. அமலாக்கத்துறை வழக்குகளில் துறை ரீதியாக பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டது. பத்து சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில் தான் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு நிலம் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை எப்படி நுழைய முடியும் என்பது மிகவும் வியப்பான விஷயமாகும். அமலாக்கத்துறை பிரதமர் மோடியின் ஏவல் நாய் போன்று செயல்படும் துறையாகும். அவர்களின் செயல்பாடு அப்படிதான் உள்ளது. அதற்கு காரணம் வீட்டு வசதித்துறையில் இருந்து ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதை ஒரு அரசு அதிகாரி பெற்றுள்ளார். அதில் முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதில் என்ன தெரிய வேண்டும் என்றால் காவல்துறை அதிகாரி, அமைச்சருக்கு பணம் வழங்கினாரா? அல்லது அந்த இடத்தை பெற்றதற்காக அரசுக்கு ஏதேனும் விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறாரா? என்பது தான். பண பரிவர்த்தனை என்ற ஒன்று உள்ளதா? என்று தெரியாதபோது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை என்று வருகிறார்கள்.
2006 – 2011 காலகட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார். இன்றைக்கு 2025. ஐ.பெரியசாமியின் அலுவலகத்திற்கு ஆவணங்களை கைப்பற்றுவதற்காக செல்கிறார்கள். இன்றைக்கு ஐ.பெரியசாமி என்ன துறைக்கு பொறுப்பு வகிக்கிறார்? அப்போது வீட்டு வசதித்துறை தொடர்பான கோப்புகள், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய துறை அலுவலகத்தில் இருக்குமா? இது யார் காதில் பூ சுற்றுகிற வேலை. அப்போது அரசியல் ரீதியாக அச்சுறுத்துவதற்காக தானே தலைமை செயலகத்திற்கு வருகிறீர்கள். அமலாக்கத்துறை எதற்காக அலுவலக பூட்டை உடைக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. தற்போது நாம் சிறப்பு சட்டத்தை இயற்றியுள்ளோம். அதில் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு முன்னதாக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் அமலாக்கத்துறை தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பவில்லை. பசுமை வெளிச்சாலையில் அமலாக்கத் துறையினர் பூட்டை உடைத்தது அமைச்சரின் தனிப்பட்ட சொத்து கிடையாது. அது அரசின் சொத்தாகும். அப்போது அமலாக்கத்துறை அரசின் சொத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
அப்போது அமலாக்கத்துறை மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அவர்களை கைதுசெய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும். ஆனால் அமலாக்கத்துறை சோதனைக்காக அரசு புகார் கொடுக்கவில்லை. பூட்டை உடைத்தார்கள் என்றுதான் புகார் அளித்துள்ளோம். அதில் அமலாக்கத்துறை கைதாகும். ஏற்கனவே மம்தா பானர்ஜி கைதுசெய்து பின்னர் விடுவித்துவிட்டார். தற்போது அமலாக்கத்துறை மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றொன்றை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். எப்படி ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்களோ? அதேபோல் இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இது தேர்தலுக்காக நடத்தப்படுகிற நாடகமாகும். அரவிந்த கெஜ்ரிவாலை வீழ்த்தியதற்கு காரணம் அமலாக்கத்துறை என்று நினைக்கிறார்கள். ஆனால் கெஜ்ரிவாலின் ஆட்சியில் உள்ள குறைபாடுகள் தான் காரணமாகும். ஆனால் பாஜக அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் திமுகவை அச்சுறுத்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறது.
ஒவ்வொரு முறை அமலாக்கத்துறை திமுகவை நோக்கி வருகிற போது மக்கள் திமுகவின் பக்கம் நிற்கிறார்கள். மக்கள் என்ன என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அதிமுகவில் வேலுமணி ஒரு பக்கம். தங்கமணி ஒரு பக்கம். இவர்கள் இருவரும் வந்துவிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி ஒருக்கம். இப்படி நாளாபுறமும் அதிமுகவும், பாஜகவும் தெறித்து ஓடுகிற காட்சி நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் திமுகவில் அப்படி இல்லையே? துணை முதலமைச்சர் சவால் விடுகிறார். ஈடி வந்தாலும், மோடி வந்தாலும் கவலை இல்லை என்று சொல்கிறார். ஆனால் மறுபுறம் அமலாக்கத்துறை என்றாலே தெறித்து ஓடுகிறார்கள். அப்போது யார் மீது மக்களுக்கு அக்கறை இருக்கும். எனவே அமலாக்கத்துறை சோதனையால் திமுகவுக்கு பின்னடைவு கிடையாது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் முகாந்திரங்கள் இருக்கிறது என்று சில செய்திகளை சொன்னார்கள். அதை ஒரு காரணமாக அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் ஐ.பெரியசாமி விவகாரத்தில் முகாந்திரமே கிடையாது. இதில் எங்கே நடைபெற்றது பண பரிவர்த்தனை. ஜாபர்சேட் இங்கே தான் இருக்கிறார். இந்த இடம் தொடர்பாக ஜாபர் சேட் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. ஐ.பெரியசாமி மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை என்பதால்தான் அமலாக்கத்துறையினர் பூட்டை உடைத்தார்கள். அதனால் தானே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்படி இருந்தால் அவர்கள் வழக்குப் பதிவு செய்துவிட்டு போயிருப்பார்களே?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.