நடிகர் மணிகண்டன், துல்கர் சல்மான் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா’, ‘காலா’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகர் மணிகண்டன். அதைத்தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். ‘ஜெய் பீம்’ படத்தில் இவர் நடித்திருந்த ராசாக்கண்ணு கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு நடிகர் மணிகண்டனுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். இது தவிர இவர் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் மணிகண்டன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே சிம்புவின் 50வது படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே மணிகண்டன் படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படப்பிடிப்பு தொடர்பான தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.