குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019–2024) பதிவு செய்யப்பட்ட 10 சிறிய கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி அளவிற்கு சந்தேகத்திற்கிடமான நிதி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”இக்கட்சிகள் உண்மையில் செலவு செய்தது வெறும் ரூ.39 லட்சம் மட்டுமே என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதே, அதிர்ச்சியைத் தாண்டிய ஒரு அரசியல் ஊழல் சதி என்பதை உறுதி செய்கிறது. தேர்தலில் மக்கள் ஆதரவு இல்லாத, எந்த அரசியல் பங்களிப்பும் செய்யாத இத்தகைய போலியான கட்சிகள் வெறும் கருப்பு பண பரிமாற்றத்திற்கும், மக்களாட்சியை விற்பனை செய்யும் கருவிகளாகவும் பயன்படுத்தப்படுவது நாட்டிற்கு ஆபத்தான நிலைமை. இந்த விவகாரம் குறித்து மக்கள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவிக்கும் போது,போலியான கட்சிகளின் பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயகத்திற்கு நேரடி ஆபத்தாகும்.
அரசியல் நிதி முறையில் வெளிப்படைத்தன்மை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியை சந்தையில் விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. உடனடியாக விசாரணை நடத்தி, உண்மையை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சியை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமையும், இந்திய அரசியலின் தூய்மையும், மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டிய இந்நேரத்தில், இவ்வாறான மோசடிகளை நாடு முழுவதும் மக்கள் கண்டிக்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.


