நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.

இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதனையடுத்து இன்று பதவியேற்பு விழாவை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் தயார் செய்து உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனிடம் வழங்கினர்.
இந்த நிலையில் இன்று 10 மணியளவில் தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் துணை குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இதனையடுத்து நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட துணை குடியரசுத் தலைவர் பதவிக்கென, சம்பளம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்கிற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அத்துடன் உறைவிடம், மருத்துவம், பயணச்செலவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் , ஓய்வுக்குப் பின்னர் அவருடைய சம்பளத்தில் இருந்து 50% ஓய்வூதியமாகவும் அவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது..
https://x.com/ANI/status/1966362690533863738