எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தங்களுக்கு 60 இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சீட் பிரச்சினையால் தான் செங்கோட்டையனை எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டு பேச வைக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- தமிழ்நாட்டில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. கூட்டணியில் பிரதான கட்சியாக அதிமுக உள்ளது. அப்போது அதிமுக தலைமையில் என்டிஏ ஆட்சி அமையும் சொல்கிற அமித் ஷா, முதலமைச்சர் ஆக ஏன் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிறைய இடங்களில் போட்டியிட்டு தனித்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். மறுநாளே பதிலடி கொடுக்கிறார்கள். அப்போது பாஜக கேட்கும் இடங்களை எடப்பாடி கொடுத்து விட்டால், அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறோம். இல்லை என்றால் அதிமுகவை உடைப்பேன். எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்துவேன். இதுதான் அமித்ஷாவின் கேம் பிளான். எடப்பாடி பழனிசாமியை பொருத்தமட்டில் பாஜக கேட்கிற 100 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை கொடுத்துவிட்டால், அதிமுகவை அவர்கள் கபலிகரம் செய்துவிடுவார்கள் என்கிற அச்சம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தோற்றார் என்பது உண்மை தான். ஆனால் அந்த இடங்களில் பாஜக என்ன வெற்றி பெற்றதா? வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவிடம் தான் வந்தாக வேண்டும். அப்போது எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிபந்தனைகளை ஏற்றால்தான் பாஜக உடன் கூட்டணி என்று சொல்லிவிட்டார்.

இந்த இடத்தில் தான் பாஜக செங்கோட்டையனை பேச விட்டார்கள். அதற்கான தேவை என்ன என்றால், தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 16 கோவில் உள்ள தொகுதிகளை தங்களுக்கு முதற்கட்டமாக ஒதுக்கித் தர வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இவை அனைத்தும் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள், எனவே அவற்றை தர முடியாது என்று எடப்பாடி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்துதான், செங்கோட்டையனை தூண்டி விட்டார்கள். கட்சி பலமாக இல்லை. வெளியேற்றப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று சொன்னார். எடப்பாடிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று காட்டுகிறார்கள். அதற்காக தான் செங்கோட்டையனை வைத்து உடைக்கப் பார்க்கிறார்கள். ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களும் பாஜக உடன் கூட்டணியில்தான் இருக்கின்றனர். பாஜக நினைத்தால் முறைகேடு செய்து தங்களை வெற்றி பெற வைக்கும் என்று அதிமுக நினைக்கிறது. இதுதான் அவர்களுக்கு இடையிலான புரிதல். அப்போது எனக்கு உரிய இடங்களை கொடுக்க வேண்டும் என்று பாஜக சொல்கிறது.

அதிமுக உடன் வேறு கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு யார் வர தயாராக உள்ளனர்? இடங்களை ஒதுக்குவதுதான் பிரச்சினை. அதிமுக அமைதியாக இருப்பதும், அமைதி இல்லாமல் இருப்பதும் பாஜக கையில் தான் உள்ளது என்பது எடப்பாடிக்கு தெரியும். அதனால்தான் அமித்ஷாவை சந்திக்க போனார். இந்த பயணத்தின்போது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம். பாஜக 60 இடங்களில் போட்டியிட முடிவு எடுத்துவிட்டனர். முறைகேடு செய்து எப்படியாவது வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதால்தான். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. கம்பியூட்டரில் எவ்வளவு பேரை வாக்காளராக சேர்ப்பது, எவ்வளவு பேரை நீக்குவது என்று கணினியில் செய்ய போகிறார்கள். மகாராஷ்டிராவில் பாஜக செய்தது போன்று தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

எல்லா விஷயங்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பதை வைத்து பார்க்க வேண்டும். விஜய் எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும் அதை பாதி வாக்குகளை பாஜகவுக்கு மாற்றிக் கொள்ளலாம். அது குறித்து பாஜகவுக்கு கவலை கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்ற உடன் புள்ளி விபரங்களை காண்பிக்க வேண்டும். வலுவான கூட்டணி காரணமாகவே வெற்றி பெற்றோம் என்று சொல்ல வேண்டும். விஜயுடன் கூட்டணி வைத்து ஒன்றும் இல்லாமல் போவதுடன், பாஜக உடன் நின்று தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைக்கின்றனர். பாஜக டிடிவி, ஓபிஎஸ் உடன் ஒரு சமரச முடிவுக்கு வந்துவிட்டனர். ஆளுக்கு 10 இடங்களை கொடுத்து என்டிஏ கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று. தமிழ்நாட்டில் திமுகவை தவிர அனைத்துக்கட்சிகளுடனும் கூட்டணி வைப்பதுதான் அவர்கள் திட்டம். இதுதான் உண்மை. விஜயை பொறுத்தவரை திமுகவுக்கு எதிராக கருத்துருவாக்கம் செய்ய வேண்டும். திமுக சாதனையை சொல்லப் போகிறது. விஜய் அந்த சாதனையை இழிவுபடுத்தப் போகிறார். அதற்கு நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கமும் ஆயிரம் பணம் வாங்குவதில்லை. எதிர் பிரச்சாரம் எடப்பாடி செய்தால் எடுபடாது. விஜய் செய்தால் எடுபடும் என்று நினைக்கிறார்கள்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு சித்தாந்த போர். தமிழனா? குஜராத்தியா? தமிழனா? ஆர்எஸ்எஸ்- ஆ? இதுதான் இங்கே நடக்கிற போட்டியாகும். இதில் விஜய் சொல்வது, டிடிவி சொல்வது, எடப்பாடி சொல்வது எல்லம் ஒன்றும் கிடையாது. கூவத்தூரில் நடைபெற்றதை டிடிவி தினகரன் சொல்லிவிட்டார். தன்னுடைய பெயரை சொல்லாமல் கையெழுத்து வாங்குங்கள். பின்னர் பெயரை அறிவியுங்கள் என்று சொன்னார். எடப்பாடிக்கு என்று ஆதரவு ஒருவரும் கிடையாது. சசிகலா சொன்னதால் தான் எடப்பாடியின் அரசியல். இல்லாவிட்டால் அவரது அரசியல் இல்லை. அதிமுக என்கிற பாரம்பரிய கட்சியை பாஜக தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கருணாநிதி எதிர்ப்பு என்பது ஒரு பிராண்ட். இதற்குள்ளாகதான் தமிழன் எதிர்ப்பு மற்றும் ஆரிய சதியும் ஒழிந்துள்ளது. இதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


