உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும், அடுத்தக் கணத்தில் தான் என்னவாக ஆவோம் என்பதை அவன் எப்போதும் தீர்மானிக்கிறான். அந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், எக்கணத்திலும் மாறுவதற்கான சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது – விக்டர் ஃபிராங்க்கெல்
ஏதென்ஸ் இராணுவத் தளபதியான பெரிக்கில்ஸ், 150 கப்பல்கள் அடங்கிய தன்னுடைய மாபெரும் கப்பற்படையுடன் பெலொப்பொனீசியப் போருக்குச் சென்றார். அப்போது திடீரென்று சூரியக் கிரகணம் ஏற்பட்டது. அவருடைய கப்பல்களைப் பேரிருள் சூழ்ந்து கொண்டது.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் குழம்பிப் போன அவருடைய படைவீரர்கள் பெரும் பீதியடைந்தனர். ஆனால் பெரிக்கில்ஸ் அதைக் கண்டு அரண்டு போகவில்லை. அவர் சுக்கானைப் பிடித்திருந்த வீரனை நோக்கிச் சென்று, தன்னுடைய அங்கியைக் கழற்றி அவனுடைய முகத்திற்கு நேராக விரித்துப் பிடித்து, “இதைக் கண்டு நீ பயப்படுகிறாயா?” என்று அவனிடம் கேட்டார். “இல்லை;” என்று அவன் பதிலளித்தான்.
பிறகு என்ன பிரச்சனை? இருளுக்கான காரணம்தானே வேறுபட்டிருக்கிறது? எனவே, சூரியக் கிரகணத்தால் உருவாகியுள்ள இந்த இருட்டைக் கண்டு எதற்காக கவலைப்பட வேண்டும்?” என்று அவர் கேட்டார்.
கிரேக்கர்கள் புத்திசாலிகள். இந்த நயமான பேச்சுக்குப் பின்னால் ஸ்டோயிசிசத்தின் அடிப்படைக் கருத்து ஒன்று ஒளித்திருந்தது. அதை நவீன உளவியலும் சுவீகரித்துள்ளது. கண்ணோட்டமே அனைத்தும் என்பதுதான் அது.
நீங்கள் ஒரு விஷயத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துவிட்டால், அல்லது அதை ஒரு புதிய கோணத்தில் பார்த்துவிட்டால், உங்கள்மீதான அதன் பிடி தளர்ந்துவிடும்.
பயம் என்பது பலவீனப்படுத்துகின்ற, கவனச்சிதறல் ஏற்படுத்துகின்ற, களைப்பு ஏற்படுத்துகின்ற, பெரும்பாலான சமயங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கின்ற ஒன்று. பெரிக்கில்ஸ் இதை முற்றிலுமாகப் புரிந்து வைத்திருந்தார். கண்ணோட்டத்தின் ஆற்றலைக் கொண்டு அந்த பயத்தை அவரால் முறியடிக்க முடிந்தது.
நாம் பெரும்பாலும், நமக்குப் பாதகம் ஏற்படுகின்ற விதத்தில், எளிய விளக்கங்களுக்கு பதிலாக அச்சுறுத்துகின்ற விளக்கங்களையே தேர்ந்தெடுக்கிறோம் என்பதை கிரேக்கர்கள் புரிந்து வைத்திருந்தனர். நாம் முட்டுக்கட்டைகளைக் கண்டு பயப்படுகிறோம். நம்முடைய கண்ணோட்டம் தவறாக இருப்பதுதான் அதற்குக் காரணம். கண்ணோட்டத்தில் ஏற்படுகின்ற ஒரு சிறிய மாற்றம் ஒரு விஷயத்திற்கு நாம் அளிக்கின்ற செயல்விடையை முற்றிலுமாக மாற்றுகிறது. பெரிக்கில்ஸ் சுட்டிக்காட்டியபடி, பயத்தை அலட்சியப்படுத்துவது இங்கு நம்முடைய நோக்கமல்ல, மாறாக, அதை விளக்கி விரட்டியடிப்பதுதான்! ஏதோ ஒன்று உங்களை பயமுறுத்துகின்றபோது, அதைச் சுக்குநூறாக உடைத்தெறியுங்கள்.
ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சூழலுக்குள் நம்முடைய கண்ணோட்டத்தை நுழைக்கின்ற திறமை இன்னும் நம் வசம்தான் இருக்கிறது. நம்மால் முட்டுக்கட்டைகளை மாற்ற முடியாது. ஆனால் முட்டுக்கட்டைகள் எப்படித் தோன்றுகின்றன என்பதை மாற்றுகின்ற வல்லமை நம்முடைய கண்ணோட்டத்திற்கு உண்டு. ஒரு முட்டுக்கட்டையை நாம் எப்படி அணுகுகிறோம். எப்படிப் பார்க்கிறோம், ஒரு சூழலுக்குள் அதை எப்படிப் பொருத்திப் பாா்க்கிறோம், அதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துகிறோம் போன்றவை, அந்த முட்டுக்கட்டையைத் தாண்டுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
ஒரு விஷயத்திற்கு முன்னால் ‘நான்’ என்ற வார்த்தையைப் போட்டுக் கொள்ள விரும்புகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது. ‘நான் மேடைப் பேச்சை வெறுக்கிறேன்’, ‘நான் இதை நாசமாக்கினேன்’, ‘நான் இதனால் காயப்பட்டுவிட்டேன்’ போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள். இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. கண்ணோட்டம் மாறுகின்றபோது, சிறிய விஷயங்கள்கூட நமக்கு மலைப்பூட்டுகின்றன.
நம்முடைய கண்ணோட்டம் சரியாக இருந்தால், மலைப்பூட்டுகின்ற முட்டுக்கட்டைகளும் நமக்கு பாதகமான விஷயங்களும்கூட நமக்கு மிகச் சிறியவையாகத் தெரியும். அவற்றைக் குறுக்குகின்ற சக்தி நம்முடைய கண்ணோட்டத்திற்கு உண்டு.
ஆனால், என்ன காரணத்திற்காகவோ, நாம் பார்க்கத் விஷயங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பாா்க்கத் தலைப்படுகிறோம். ஒரு பேரப்பேச்சு தோல்வியில் முடிந்ததற்காகவோ அல்லது ஒரு சந்திப்புக்கூட்டத்தைத் தவறவிட்டுவிட்டதற்காகவோ நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம். அதைத் தனியான ஒரு நிகழ்வாகப் பார்த்தால், அது கொண்டுவருகின்ற நூறு சதவீத வாய்ப்புகளை நாம் இழந்துவிடுகிறோம் என்பது உண்மைதான்.
ஆனால், இங்கு முக்கியமான ஒன்றை நாம் தவறவிட்டுவிடுகிறோம். ”தொழில் வாய்ப்புகள் பேருந்துகளைப் போன்றவை. ஒன்று போனால் அடுத்து இன்னொன்று வரும்,” என்று தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். வாழ்வில் நாம் கலந்து கொள்கின்ற மொத்த சந்திப்புக்கூட்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு சந்திப்புக்கூட்டத்தை நாம் தவறவிட்டது ஒரு பெரிய விஷயமே அல்ல. அது ஒருவேளை நமக்குப் பாதகமானதாகக்கூட இருந்திருக்கலாம். அடுத்து வரவிருக்கின்ற வாய்ப்பு இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம்.
கண்ணோட்டத்திற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன.
- உலகம் குறித்த நம்முடைய பொதுவான பார்வை.
- உலகை ஒரு தனிநபரின் கண்களின் மூலமாகப் பார்க்கின்ற பார்வை.
இரண்டுமே முக்கியம். முன்பு பயமுறுத்துவதாக, கடக்கப்பட முடியாததாக இருந்த ஒரு சூழ்நிலையை மாற்ற இரண்டையுமே நம்மால் பயன்படுத்த முடியும்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனி, முதன்முதலாகத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடி ஹாலிவுட்டுக்குச் சென்றபோது, அவர் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டார். திரைப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தன்னை விரும்ப வேண்டும் என்று ஜார்ஜ் ஆசைப்பட்டார். ஆனால் அது நிகழவில்லை என்பதால், அது அவருக்கு வேதனை ஏற்படுத்தியது. தன் திறமையைக் கண்டுகொள்ளத் தவறியதாக அவர் அந்த அமைப்புமுறையின்மீது குற்றம் சாட்டினார்.
இந்தக் கண்ணோட்டம் உங்களுக்குப் பரிச்சயமானதாக இருக்கக்கூடும். நாம் வேலை தேடுகின்றபோது, வாடிக்கையாளர்களாக வாய்ப்புள்ளவர்களிடம் நம்முடைய பொருட்களை அல்லது சேவையை விற்க முயற்சிக்கின்றபோது, அல்லது வசீகரமான அந்நியர் ஒருவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றபோது, அவற்றின் விளைவுகள் நாம் எதிர்பார்ப்பதுபோல இல்லாமல் போய்விட்டால் இந்தக் கண்ணோட்டத்தைத்தான் நாம் கடைபிடிக்கிறோம்.
ஒரு புதிய கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதும் ஜார்ஜுக்கு எல்லாமே மாறிவிட்டது. பொருத்தமான ஒரு நடிகரைக் கண்டுபிடிப்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சனைகரமானதாக இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவர்கள் நடிகர்களுக்கான தேர்ந்தெடுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றபோது, அந்த அறைக்குள் அடுத்து நுழைகின்ற நபர் தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற நபராக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர். இப்படிப்பட்டத் தேர்ந்தெடுப்புகள் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை அன்றி, தன்னுடைய பிரச்சனையைத் தீா்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்பதை ஜார்ஜ் உணர்ந்து கொண்டார்.
அவருடைய கண்ணோட்டம் மாறியதைத் தொடர்ந்து, அவர் இப்போது தன்னை அந்தத் தயாரிப்பாளர்களின் பிரச்சனைக்கான தீர்வாகப் பார்த்தார். அவர் இனியும், தனக்கு ஒரு திரைப்பட வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த ஒருவராக இருக்கவில்லை. மாறாக, தனித்துவமான ஒன்றைத் தயாரிப்பாளர்களுக்கு வழங்குகின்ற ஒருவராக அவர் உருவெடுத்தார். தயாரிப்பாளர்களைத் தன்னுடைய பிரார்த்தனைக்கான விடையாகப் பாா்ப்பதற்கு பதிலாக, தன்னை அவர்களுடைய பிரார்த்தனைக்கான விடையாக அவர் பார்க்கத் தொடங்கினார். அதைத்தான் அவர்கள் நடத்திய நடிப்புச் சோதனைகளில் அவர் வெளிப்படுத்தினார். அங்கு அவர் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு அவர்கள் தேடிக் கொண்டிருந்த தகுதியான நபர் தான் என்பதை அவர் வெளிப்படுத்தத் தொடங்கினார். ஒரு கதாபாத்திரத்திடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, அதைத் தன்னால் கொடுக்க முடியும் என்பதை அவர் அவர்களுக்கு நிரூபித்தார்.
சரியான கண்ணோட்டத்திற்கும் தவறான கண்ணோட்டத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற நிகழ்வுகளை, நாம் கொண்டிருக்கின்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நாம் அர்த்தப்படுத்துகிறோம். அதன் அடிப்படையிலேயே நாம் செயல்விடை அளிக்கிறோம்.
கண்ணோட்டத்தைத் தொடர்ந்தே செயல்நடவடிக்கை வரும். கண்ணோட்டம் சரியானதாக இருந்தால், செயல்நடவடிக்கையும் சரியானதாகவே இருக்கும்.


