விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து கடிந்துரைக்கின்றனரே!
மூன்றடுக்கு மாடியிலே, வசித்துக்கொண்டு, உல்லசத்துடன் உறவாடிக்கொண்டு இருக்க, நிலை பெற்றும், அதனை அனுபவிக்க மறுத்து, அறியாமையை அழிக்க, இரவு பகல் பாராமல், நோய் நொடியைக் கவனிக்காமல், வெட்டு குத்துவருமோ என்று அஞ்சாமல், காடு மேடு, பட்டிதொட்டி சுற்றிப் பரணிபாடும் பெரியாரைப் பதட்டமாகக் கண்டிக்கும் பதர்களைக் கேட்கிறேன், அவர் ஆற்றிய அருந்தொண்டுக்கு, இந்நாடாகவன்றி வேறோர் நாடாக மட்டுமிருந்தால், எத்தனை இடங்களிலே சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும்! எத்துணை புகழ் கிடைத்திருக்கும்!

நன்றி கெட்டக் கூட்டத்திலே தலையுடன், தடி ஊன்றித் தள்ளாடி நடந்து வரும் தலைவனைத் தகாத மொழி கூறுகிறீர், தாங்காது, தாங்காது தமிழகம், இத்தகையத் துரோகத் தூற்றலை.
தலைவர் உண்டு! வண்டி வண்டியாகக் கொண்டுவரலாம்! புதிய புதிய மோட்டாரும் வரக்கூடும்! அழகழகான அரண்மனைகளிலே வாசஞ்செய்பவர்களைக் கொண்டு வரலாம்! ஆனால் ஒரே ஒரு பெரியாரைத்தான் பெறமுடியும்!
சரியப்பா! ஜட்கா கிடைக்காவிட்டால் ஒரு மட்டு வண்டிதான் பாரேன். அதுகூடத் தேவையில்லை. மளமளவென்று நடந்தே போய்விட்டால். பத்தணா மிச்சம் என்று கூறிவிட்டுப் பாதசாரியாகி, வீதிபல நடந்து, விறுவிறுவென்று ரயிலடி செல்ல யார் இருக்கிறார்கள், பெரியார் தவிர,
” கூட்டத்திற்குப் போலீஸ் பந்தோபஸ்து தக்கப்படி ஏற்பாடாக வேண்டும். டி.எஸ்.பி.எனக்கு வேண்டியவர்தான். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் ” என்று கோழைமொழி பேசும் கோடீஸ்வரனைக் கூட்டி வரலாம். அவரைக் கட்சிக்குக் கூட்டி வைப்பதால் கூலியும் பெறலாம், ஆனால், ” அடே, என்னப்பா, நீங்கள் இப்படித் தொல்லை கொடுக்கிறீர்கள். கல்லை போடுபவன், போட்டுக்கொண்டிருக்கட்டுமே. உங்களுக்குப் பயமாக இருந்தால் போய்விடுங்கள் தொலைவாக. அவன் கல்வீசி, என்ன காணப்போகிறான். கொஞ்ச நேரமானதும், கை வலி எடுக்கும், குந்தனயா குரங்கே சந்தடி அடங்க என்று இருந்து விடுவான் என்று கல்மாரியின் நடுவே கலங்காமொழி பேசிடும், ஒரு தலைவரைப் (பெரியார் தவிரக்) காட்டுங்கள் பார்க்கலாம்!
சிங்காரச் சோலையிலே உலாவிடும் சீமான்களைத் தேடுகிறீர், கடைவீதி உலவி நமக்காகக் காரியமாற்றும் கர்மயோகியைக் கண்டிக்கிறீர், சேர்மன் இராமசாமி வெறும் ஆசாமியானார், உங்கள் பொருட்டு உழைக்க,ண ஆசாமி சர். ஆனதற்காக, சாமரசம் வீசச் செய்கிறீர்.
பெரியார் இராமசாமியின் பெருந்தொண்டுக்கு இணையாகப் பணியாற்றும் தலைவரை இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாது. எதிர்காலம் அதனை நமக்கு இடித்து இடித்துக காட்டப் போகிறது. ”
– அறிஞர் அண்ணா (18 – 3 1945 , திராவிடநாடு )
தமிழ் மக்களுக்குச் சுய மரியாதையையும், சுய சிந்தனையையும் ஊட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாக முன்வைத்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து தனது 94 வது வயதில் மறைந்தவர். தந்தை பெரியாரின் நினைவு நாள், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் தன்னுடைய கொள்கைகள் மூலம் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதையும் உணரச் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளின் தேவை சமூகத்தில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அத்தகைய வலிமையான கொள்கைகளைத் தன்னுடைய வாரிசாக தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார் மட்டுமே.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!


